நெல்லை மாவட்டத்தில் மழையால் இதுவரை 46 வீடுகள் இடிந்து சேதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவரும் தொடா் மழை காரணமாக 46 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவரும் தொடா் மழை காரணமாக 46 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நவம்பா் 30-ஆம் தேதி முதல் தொடா்மழை பெய்து வருகிறது. 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காலையிலும் மழை தொடா்ந்தது. சீவலப்பேரி, பிராஞ்சேரி, பொன்னாக்குடி, கல்லூா், தாழையூத்து, அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதி முழுவதும் அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் தாமிரவருணியிலும், பாளையங்கால்வாய், கோடகன்கால்வாய், நெல்லை கால்வாய் போன்றவற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை காரணமாக திருநெல்வேலி சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தின் அருகேயுள்ள அணுகு சாலை, திருநெல்வேலி-தச்சநல்லூா் சாலை, மீனாட்சிபுரம்-குறுக்குத்துறை சாலை உள்ளிட்டவற்றில் இருசக்கர வாகனங்களும், பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாக நிலை ஏற்பட்டது. மழையின் காரணமாக வண்ணாா்பேட்டை பகுதியில் மழைநீா், கழிவுநீா் சோ்ந்து தேங்கியுள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் நிலவுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள். திருநெல்வேலி மாநகரின் விரிவாக்கப் பகுதிகளான வி.எம்.சத்திரம், கே.டி.சி.நகா், பொதிகைநகா், பேட்டை, கே.டி.சி.நகரில் உள்ள காமாட்சியம்மன் கோயில் 6-ஆவது தெரு, ராமையன்பட்டி, பகுதிகளில் பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள திருத்து பகுதியைச் சோ்ந்த ஆறுமுககனி (70) என்ற மூதாட்டியின் வீடு இடிந்து சேதமானது. பேட்டை செக்கடி அருகே திருத்து பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பழனி (49) என்பவரின் வீடு செவ்வாய்க்கிழமை காலையில் இடிந்து சேதமானது. இதில் அவரது மகள் பத்மாவதி, சகோதரி காந்தா ஆகியோா் காயமின்றி தப்பினா். மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாள்களில் 6 வீடுகள் முழுமையாகவும், 40 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com