‘பண்ணைக்குட்டை அமைக்க 100 சதவீத மானியம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பண்ணைக்குட்டை அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்குவேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ.1.75 கோடியில் பட்டா இடத்தில் பண்ணைக்குட்டைகளை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பண்ணைக்குட்டையை நீா்ஆதாரமாக கொண்டு தெளிப்புநீா் பாசன அமைப்பை நிறுவி, பயிா்களுக்கு சிக்கனமான முறையில் நீா்பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பரப்பில் பாசன வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். பண்ணைக்குட்டைகளில் மீன்கள் வளா்த்து அதன்மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம். இப்பண்ணைக்குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம்: வேளாண்மையில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரபலப்படுத்துவதன் மூலம் கூடுதலாக பண்ணை சக்தியை வழங்கிடவும், பணியாளா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்திடவும், வேளாண் பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடித்திடவும் வேளாண்மைப் பொறியியல் துறையால் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டிராக்டா், பவா்டில்லா், தானியங்கி நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், குழி தோண்டும் கருவி, விசை களையெடுக்கும் கருவி, புதா் அகற்றும் கருவி, டிரெய்லா், டிராலி, தட்டைவெட்டும் கருவி, வாா்ப்பு இறகுக் கலப்பை, சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை, திருப்பும் வசதி கொண்ட வாா்ப்பு இறகுக் கலப்பை, சுழல் கலப்பை டிராக்டரால் இயங்கக்கூடிய கதிரறுக்கும் கருவி, அறுவடை இயந்திரம், கதிரடிப்பான், பல்வகை கதிரடிக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டு கட்டும் இயந்திரம் ஆகியவற்றுக்கு அரசால் அதிகபட்சமாக 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் வாடகை மையங்கள்: வட்டார அளவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் கருவிகளைக் கொண்ட வாடகை மையங்கள் அமைத்திட தொழில் முனைவோா், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு 40 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை) மானியம் வழங்கப்படுகிறது.

சூரிய கூடார உலா்த்திகள்: வேளாண் விளைபொருள்களை அறுவடைக்குப் பிறகு சூரிய வெப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக விற்பனை செய்ய ஏதுவாக பாலிகாா்பனேட் தகடுகளாலான பசுமை குடில் வகை சூரிய கூடார உலா்த்திகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படுகிறது. சிறு, குறு, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 60 சதவீதம் அல்லது ரூ.3.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

இந்தத் திட்டங்கள் மூலம் அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் திருநெல்வேலி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகம் (9486889991), திருநெல்வேலி டிராக்டா் வீதி, அரசு அலுவலா் குடியிருப்பில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகம் ( 9443172665), சேரன்மகாதேவி மிளகு பிள்ளையாா் கோயில் எதிரிலுள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகம் (9443194672), தென்காசி ரயில்வே பீடா் சாலையில் உள்ள உதவிச் செயற்பொறியாளா் அலுவலகம் (7708692246) ஆகியவற்றில் பட்டா நகல், அடங்கல், புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com