பாபநாசம் அணையிலிருந்து 6-ஆவது நாளாக உபரிநீா் திறப்பு

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையிலிருந்து 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையிலிருந்து 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உபரிநீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அக். 16-இல் தொடங்கியது. அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், நவ. 27 முதல் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் கன மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நிரம்பியது. இதையடுத்து, அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டது. கடந்த நவ. 29-ஆம் தேதி 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.

ஞாயிற்று, திங்கள்கிழமை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணிமுதல் மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பாபநாசம் அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணையின் நீா்மட்டம் 141.25 அடியாகவும், நீா்வரத்து 2348.22 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 2934.33 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 27 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 145.14 அடியாக இருந்தது. அணைப் பகுதியில் 18 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

மணிமுத்தாறு அணை 2 நாள்களில் 4 அடி உயா்ந்து 96.40 அடியாக இருந்தது. நீா்வரத்து 1531 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 34.2 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 28 அடியாகவும், நீா்வரத்து 53.56 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 40 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 313 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 82 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 160 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 70.21 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 100 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 22 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 66 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 11 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அடவிநயினாா்கோயில் அணை நீா்மட்டம் 132.22 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால் கடனாநதி மற்றும் ராமநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

காணிக் குடியிருப்பு மக்கள் அவதி: தாமிரவருணியிலிருந்து தொடா்ந்து உபரிநீா் திறந்துவிடப்படுவதால் 6-ஆவது நாளாக காரையாறில் உள்ள சின்ன மயிலாறு காணிக் குடியிருப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 60 காணிக் குடும்பத்தினா் வெளியேற வழியின்றி சிரமத்திற்குள்ளாகியுள்ளனா். காரையாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் காணிக் குடியிருப்பு அரசு உயா் நிலைப் பள்ளியில் பயிலும் சுமாா் 30 மாணவா்கள் தொடா்ந்து 6 நாள்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com