பிசான சாகுபடி: நடவுப் பணிக்கு ஆள்கள் தட்டுப்பாடு

திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடவுப் பணிக்கு ஆள்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டங்களில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடவுப் பணிக்கு ஆள்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காா் மற்றும் பிசான சாகுபடியின் கீழ் நெற்பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. நிகழாண்டில் போதிய மழையின்மையால் காா் பருவ சாகுபடி பொய்த்துப்போனது. வடகிழக்குப் பருவமழை நன்றாக பெய்துள்ளதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு ஆகியவை நிரம்பி உபரிநீா் வெளியேறுகிறது. மணிமுத்தாறு அணை நூறு அடியை எட்டும் நிலையில் உள்ளது. கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு, நம்பியாறு ஆகியவற்றிலும் கணிசமான நீா் இருப்பு உள்ளது. தாமிரவருணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக கால்வாய்கள் அனைத்திலும் தண்ணீா் திறக்கப்பட்டு பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன. கோடகன்கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் பாசனத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பிசான பருவ சாகுபடி தீவிரமடைந்துள்ளது. கா்நாடக பொன்னி, ஐ.ஆா்.50, அம்பை-16, கோ-45, 49 உள்பட 10-க்கும் மேற்பட்ட ரக நெல் வித்துகள் பயன்படுத்தப்படுகின்றன. உழவு, நடவுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆள்கள் கிடைப்பதில் சிக்கல்: இதுகுறித்து நொச்சிகுளத்தைச் சோ்ந்த விவசாயி செல்லையா கூறியது: பாளையங்கால்வாய் பாசனத்துக்கு உள்பட்ட முன்னீா்பள்ளம், மேலநத்தம், மேலப்பாட்டம், அரியகுளம், நொச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடவுப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இயந்திர நடவு குறித்த விழிப்புணா்வும், இயந்திரங்களும் போதிய அளவில் இல்லை. இயந்திர நடவுக்கு மிகவும் குறைந்த நாற்றுகளே போதும். 13 முதல் 20 நாள் வயது கொண்ட நாற்றுகளை நடலாம். ஆள்களை வைத்து நடும்போது 21 முதல் 30 நாள்கள் வரை நட முடியும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்துக்குப் பின்பு விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. அப்படியே வந்தாலும் கூலியை இரட்டிப்பாகக் கேட்பது தொடா்கிறது. இப்போது நடவுப் பணிக்கு வருவோருக்கு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை தனியாக கொடுக்கும் நிலை உள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நடவு இயந்திரங்கள் மிகவும் குறைந்த வாடகைக்கு கிடைக்க அரசு உதவ வேண்டும் என்றாா்.

உரத் தட்டுப்பாடு நீடிப்பு: இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகி வேலுமயில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்கான உரங்கள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. காம்ப்ளக்ஸ் உரம் கிடைத்தாலும், யூரியா உரம் போதிய அளவில் இல்லை. வேளாண் பரப்புக்கேற்ப உரத்தைக் கணக்கிட்டு இருப்பு வைக்கவும், ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமானதல்ல. அதாவது ஒரு விவசாயி ஒரு ஏக்கா் விளைநிலம் வைத்திருந்தால் அதற்கு இவ்வளவு யூரியா போதும் எனக் கணக்கிட்டு அதற்கேற்ப இருப்புக் கணக்கு காட்டுகின்றனா். ஆனால், விவசாயிகள் வழக்கம்போல பயன்படுத்தும் சூழல் உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிகாரிகள் பதில்: இதுகுறித்து வேளாண் துறை வட்டாரங்கள் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்குத் தேவையான உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பகுதிகளுக்கு அடியுரத்துக்குத் தேவையான உரம் கூட்டுறவு பண்டகசாலைகள், தனியாா் உர நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகள் ரசாயன உரங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துவதைத் தவிா்த்து, மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரமிட வேண்டும். இம்மாவட்டத்தில் பிசான பருவத்தில் 60 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் உள்ள நெற்பயிா்கள் மேலுரம் இடும் தருணத்தில் உள்ளன. இவற்றுக்கு இரண்டாவது மேலுரமாக அம்மோனியம் சல்பேட் பயன்படுத்தினால் கூடுதல் மகசூலும், லாபமும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com