ஆலங்குளத்தில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஆலங்குளம் பிரதான சாலையிலிருந்து காய்கனிச் சந்தை வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால்  வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆலங்குளம் பிரதான சாலையிலிருந்து காய்கனிச் சந்தை வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால்  வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆலங்குளம் - நெட்டூர் சாலையில் அமைந்துள்ளது தையல்நாயகி காய்கனிச் சந்தை. திருநெல்வேலி பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள இந்த சந்தையின் வடபுறத்திலிருந்து நெட்டூர் சாலையும், கீழ் புறத்திலிருந்து நல்லூர் சாலையும் தொடங்குகின்றன. கடந்த ஆண்டு ரூ. 17 கோடி மதிப்பில் நெட்டூர் சாலையும், ரூ. 63 லட்சம் மதிப்பில் நல்லூர் சாலையும் புதுப்பிக்கப்பட்டன.
இரு சாலைப் பணிகளுமே நெட்டூர் விலக்குப் பகுதியில் இருந்து தொடங்காமல் காய்கனிச் சந்தையில் இருந்தே தொடங்கி பணிகள் நிறைவடைந்தன. இதனால் பிரதான சாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவுள்ள காய்கனிச் சந்தை வரையுள்ள சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாகவே காணப்படுகின்றன. இதனால் இவ்வழியே காய்கனிச் சந்தைக்கு வரும் வாகனங்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை கடும் சிரமத்துக்குள்ளாகின்றன.
இச்சாலையை சீரமைக்கக் கோரி, பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும், சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதியை நெடுஞ்சாலைத் துறையும், பேரூராட்சியும் செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருவதாகவும் காய்கனிச் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை ஆலங்குளம் உதவிப் பொறியாளர் முத்துராஜிடம் கேட்ட போது, இச்சாலையை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பணி தொடங்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com