முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வறட்சியின் பிடியில் கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு அணைகள்!
By DIN | Published On : 28th February 2019 11:03 AM | Last Updated : 28th February 2019 11:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் கொடுமுடியாறு, வடக்குப் பச்சையாறு அணைகள் வறட்சியின் பிடியில் உள்ளன. கால்நடைகளுக்கு தண்ணீருக்காகவும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும் கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமே மழை பெய்ததால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகியவற்றின் நீர்மட்டம் மட்டுமே ஓரளவு உயர்ந்தது. வடக்கு, கோடை மேழலகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்டவற்றில் நீர் திறக்கப்பட்டதால் தாமிரவருணி வடிநிலக் கோட்டப் பகுதிகளில் பிசான சாகுபடி நடைபெற்றது. இப்போது அறுவடைப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.
அதேநேரம், மானாவாரி பகுதிகளில் போதிய மழையின்மையால் குளங்கள் வறண்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளன. அவற்றில், 362 குளங்களில் 2 மாதங்களுக்கும், 1,000 குளங்களில் ஒரு மாதத்துக்கும் தண்ணீர் உள்ளது. 1,176 குளங்கள் வறண்டுவிட்டன. அவற்றில் மானாவாரி பகுதிகளில் உள்ள 757 குளங்களில் தண்ணீர் மிகவும் குறைந்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஜனவரியில் இயல்பான மழை அளவான 50.2 மில்லி மீட்டருக்கு பதிலாக 4.52 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.
அணைகள் வறண்டன: 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 59.40 கனஅடி நீரே உள்ளது. பிற அணை நீர்மட்டம்: சேர்வலாறு அணை- 64.17 கனஅடி, மணிமுத்தாறு அணை- 84.39 கனஅடி, கடனாநதி அணை - 45.90 கனஅடி, ராமநதி அணை - 25 கனஅடி, கருப்பாநதி அணை - 37.79 கனஅடி, குண்டாறு அணை - 15 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணை - 2.75 கனஅடி, நம்பியாறு அணை - 12.50 கனஅடி, கொடுமுடியாறு அணை - 2 கனஅடி, அடவிநயினார் அணை - 36 கனஅடி.
பாபநாசம் கீழணையிலிருந்து 1,008.50 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கான நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கொடுமுடியாறு, பச்சையாறு அணைகள் வறண்ட நிலையில் உள்ளன. ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அணைகள் சேறும் சகதியுமாக உள்ளன. பிப்ரவரி இறுதியிலேயே நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பிப்ரவரி இறுதி வாரத்திலேயே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அறுவடைப் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. ஆனால், கோடை மழை பெய்தால் மட்டுமே கால்நடைகளைக் காப்பாற்ற முடியும். அதேபோல, தாமிரவருணியிலிருந்து உறைகிணறுகள் மூலம் குடிநீர் எடுக்க அணைகளில் கணிசமான நீர்இருப்பு தேவை. கோடை மழை பெய்யாவிட்டால் குடிநீர்த் தட்டுப்பாடு உருவாகும் அச்சம் அதிகரித்துள்ளது என்றனர்.