முறைகேடு புகார் பணகுடி பகுதி குளங்களில் மண் எடுக்கும் அனுமதி ரத்து
By DIN | Published On : 28th February 2019 11:01 AM | Last Updated : 28th February 2019 11:01 AM | அ+அ அ- |

பணகுடி பகுதி குளங்களில் மண் அள்ளுவதில் முறைகேடு நடந்து வருவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மண் அள்ள அளிக்கப்பட்டிருந்த அனுமதியை வருவாய்த்துறையினர் ரத்து செய்தனர்.
பணகுடி பகுதி குளங்களில் அரசு விதிமுறைப்படி மண் எடுப்பதற்கு ராதாபுரம் வட்டாட்சியர் புஹாரி அனுமதி வழங்கியிருந்தார். இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்ட டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் ஒரு வண்டிக்கான அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு பலமுறை மண் அள்ளிவந்தனர்.
விவசாய தேவைக்கு மண் எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தை மீறி, வீட்டு வேலைகளுக்கும், பள்ளங்களை நிரம்புவதற்குமே மண் எடுக்கப்பட்டதாம். மண் எடுத்து செல்பவர்கள் அதை ஒரு டிராக்டர் மண் ரூ.500 முதல் ஆயிரம் வரையில் விற்பனை செய்து வந்தனராம். மேலும் அரசு விதிமுறையை மீறி ஓரே இடத்தில் 15 அடி ஆழம் வரையில் மண் எடுக்கப்பட்டதாம்.
இதையடுத்து, விதிமுறை மீறி மண் எடுப்பதற்கு ராதாபுரம் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார். அதோடு மண் எடுப்பதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியையும் ரத்து செய்தார். இதனை அடுத்து வருவாய்த்துறையினர் மண் எடுக்க வழங்கப்பட்டிருந்த அனுமதி சீட்டுகளை திரும்பப் பெற்றனர்.