பிளாஸ்டிக் தடை: நெல்லையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு: இன்றுமுதல் அபராதம்

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில்,


தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். 100 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக்கின் தீமைகள் மற்றும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலும் உற்பத்தி செய்யப்படும் கற்றாழை நார், பனை ஓலை, மண்பாண்ட பொருள்கள் உள்ளிட்டவை குறித்த கண்காட்சியும் நடத்தப்பட்டன.
பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன் நாயர் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் சத்தீஷ்குமார் அறிவுறுத்தலின்பேரில் மாநகரப் பகுதிகளில் அமல்படுத்தும் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
உணவு விடுதிகள், ஜவுளி விற்பனையகங்கள், பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை செய்யப்பட்டது.
ஒரு குழுவுக்கு தலா 10 பேர் வீதம் 9 குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுகாதார ஆய்வாளர்கள் பாலு, கருப்பசாமி, கண்காணிப்பாளர்கள் முத்தையா, இசக்கி, கிருஷ்ணன், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துக்குமார், துர்காதேவி, முனியசாமி உள்ளிட்டோர் திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். 
மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையிலும், திருநெல்வேலி நகரத்தில் முருகன் தலைமையிலும் ஆய்வு நடைபெற்றது.
நாளை முதல் அபராதம்: இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் நீர்வளம், நிலவளம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மாநகரப் பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள், வாருகால்கள், பாதாள சாக்கடை திட்டக் குழாய்களில் பாலிதீன் பைகள் அடைப்புகளை ஏற்படுத்தி சுகாதாரக் கேட்டுக்கு வழிவகுக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டம்ளர்கள் உள்பட 14 வகையான பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்துள்ளோம்.
மாநகரப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 
500 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல்நாள் என்பதால் வணிகர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை முதல் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, பொதுமக்களும், வியாபாரிகளும் அரசின் உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, சுகாதாரக் கேடுகளைத் தடுக்க உதவ வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com