நெல்லையில் நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்: 14 பேர் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 இடங்களில் நடத்திய திடீர்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 இடங்களில் நடத்திய திடீர் சோதனையில்  நாட்டுவெடிகுண்டுகள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள பக்கப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (65), ஐஸ் வியாபாரி. இவரது பேரன் சுடலைமணி (18). இவர்கள் இருவரையும் கடந்த 26ஆம் தேதி மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக சின்னதம்பி, மாரிமுத்து, அருண்குமார், அவரது நண்பர் சின்னதம்பி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சின்னதம்பி, மாரிமுத்து ஆகியோர் அண்மையில் ஆலங்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இக்கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வல்லநாடு சுற்றுவட்டார கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சிலர் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம்புதுக்குளம், மேலக்கரை பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் திருநெல்வேலி மாநகர போலீஸாருடன் இணைந்து தனிப்படை போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள், வாள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், தச்சநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின்போது சில வீடுகளில் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களைப் பதுக்கியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இந்திய ஆயுதத்தடை சட்டம், சதித் திட்டத்துக்கு முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த எஸ்டேட் மணி (36), அவரது வீட்டில் இருந்த பாறைகுளத்தைச் சேர்ந்த கணேசன் (33), கல்லூரைச் சேர்ந்த சுப்பிரமணி, சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் இளைஞரணி மாநிலச் செயலர் கண்ணபிரான் (40), அவரது வீட்டில் இருந்த சத்திரம்புதுக்குளம் அஜித் (29), அருண்(32), மேட்டுபிரான்சேரி ஆறுமுகராஜா (33), மணப்படைவீடு புதியவன் (31), நடுவக்குறிச்சி செல்லப்பாண்டி (30), வேல்முருகன் (30), மேலக்கரையைச் சேர்ந்த தமிழ்நாடு தேவேந்திர குல மக்கள் இயக்க நிறுவனர்- தலைவர் குமுளி ராஜ்குமார் (39), அவரது வீட்டில் இருந்த கங்கைகொண்டான் ஆறுமுகம் (20), கம்மாளங்குளம் அருண்குமார் (23), ராஜதுரை (26)  ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் மற்றும் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com