சுடச்சுட

  

  குதிரையின் வயிற்றில் 500 கிராம் பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

  By DIN  |   Published on : 12th January 2019 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மிகவும் அரிய அறுவை சிகிச்சையின் மூலம் குதிரையின் வயிற்றில் இருந்து 500 கிராம் பிளாஸ்டிக்கை மருத்துவர்கள் அகற்றினர்.
  கேரளத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்குச் சொந்தமான பண்ணைவீடு தென்காசியில் உள்ளது. அங்கு 12 குதிரைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றரை வயதுடைய பெண் குதிரைக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து கடந்த 2-1-2019இல் திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் குதிரை சேர்க்கப்பட்டது.
  கால்நடை மருத்துவமனையின் தலைவர் ராம்பிரபு தலைமையில் சிகிச்சையியல் துறைத் தலைவர் பொன்னுசாமி, மருத்துவர்கள் இன்பவேலன், சுந்தர்ராஜன் ஆகியோர் குதிரைக்கு முழு உடல் பரிசோதனை செய்தனர். அப்போது குதிரையின் குடல்களில் வீக்கம் இருப்பது தெரியவந்தது. ஊசி, வாய்வழி மருந்து கொடுத்தும் நோய் குணமாகவில்லை. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
  அதன்படி கடந்த 10-1-2019இல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் தர்மசீலன் தலைமையில் மருத்துவர்கள் விஷ்ணுகுருபரன், பாரதிதாசன், கோகிலா, நினு ஆகியோர் கொண்ட குழுவினர் குதிரைக்கு மயக்கமருந்து கொடுத்து அறுவை சிகிச்சைசெய்தனர். 3.30 மணி நேரம் நடைபெற்ற அறுவைசிகிச்சையின்போது குதிரையின் குடலில் இருந்து சுமார் 500 கிராம் பிளாஸ்டிக் திடக்கழிவுகளை அப்புறப்படுத்தினர். அதற்கடுத்த சில மணி நேரத்தில் குதிரை உடல்நலம் பெற்றது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை கல்லூரி முதல்வர் (பொ) ஜாண்சன் ராஜேஷ்வர் பாராட்டினார்.
  இதுகுறித்து மருத்துவர் தர்மசீலன் கூறுகையில், குதிரைகளின் குடலில் அறுவை சிகிச்சை என்பது இந்திய அளவில் மிகவும் அரிதான ஒன்றாகும். இக் கல்லூரியில் இதுபோன்ற சிகிச்சையளிப்பது இதுவே முதல் முறையாகும். குதிரைகள் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சாப்பிடும்போது கோலிக் எனப்படும் வயிற்றுவலி உருவாகும். அந்த நேரத்தில் குதிரைகள் ஓய்வற்ற நிலையில் இருக்கும். முன்னங்கால்களை தரையில் அடித்தல், அடிக்கடி படுத்து எழும்புதல் போன்ற அறிகுறிகள் தெரியும்போது உடனடியாக கால்நடை மருத்துவர்களை அணுக வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai