சுடச்சுட

  

  காந்திய சுற்றுப்பயணம் : சங்கரன்கோவில் அருகே காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி

  By DIN  |   Published on : 13th January 2019 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நினைவிடத்தில், காந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மாணவர்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
  மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தினமணி நாளிதழ் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு விழாவையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் தமிழகத்தில் காந்தியடிகள் தடம் பதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அவரது கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பார்வையிடும் வகையில், அண்ணலின் அடிச்சுவட்டில் என்ற காந்தியச் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் காந்திய சுற்றுப்பயணத்தை தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிவைத்தார். அவர்கள் அங்கிருந்து பேருந்தில் மதுரை டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம் உள்ளிட்ட காந்தி தடம் பதித்த பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், சனிக்கிழமை பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூருக்கு வந்தனர்.
  மாணவர்களை ராயகிரி ராம் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், சங்கரன்கோவில் சர்வோதய சங்கம், காந்திய நிர்மாண சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த காந்தியவாதிகள் வரவேற்றனர். பின்னர், நிட்சேப நதிக்கரையில் காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட நினைவிடத்துக்குச் சென்றனர். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந் நினைவிடத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக காந்தி காட்சிக்கூட விரிவுரையாளர் சப்ராபீவி அல்அமீன் மற்றும் மாணவர்கள், காந்திய மற்றும் வினோபா பாவே பாடல்களைப் பாடினர். நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
  இந்நிகழ்ச்சியில் ராம் பப்ளிக் சாரிட்டபிள் நிறுவனர் ராஜாராம், சங்கரன்கோவில் சர்வோதய சங்கச் செயலர் பாலகிருஷ்ணன், சர்வோதய சங்க மேலாளர் மாரியப்பன், பொருளாளர் சுப்பையா, ஓய்வுபெற்ற மூத்த சர்வோதய சங்க ஊழியர் செல்லையா, ஆ.சுப்பையா, க.கணேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai