இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பணியிடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பணியிடத்துக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை வரும் 18-ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை பணியிடத்துடன் பணி நிரவல் செய்யவேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் பணிநிரவலில் ஆள் இல்லாத போது அருகில் உள்ள ஒன்றியங்களில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 
இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் திருநெல்வேலி மாவட்ட செயலர் செ.பால்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 36 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. எமிஸ் அறிக்கைப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 24 இடைநிலை ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எஞ்சிய 12 இடங்களுக்கு உபரியாக இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு மாற்றுப்பணி என்ற பெயரில் ஆணை வழங்கி வரும் 18-ஆம் தேதி முதல் அங்கன்வாடியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டும் எனக் கூறி ஆணை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது காலிப்பணியிடங்கள் மற்றும் தேவைப்பணியிடங்கள் 30-க்கும் மேல் உள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்களை இக்காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்யாமல் அங்கன்வாடி பணியிடத்திற்கு மாற்றுவதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
மேல்நிலைக்கல்வி முடித்து இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று பட்டயச்சான்று பெற்று இடைநிலை ஆசிரியராக பணிபுரிய பணி நியமனம் செய்யப்பட்ட ஒருவரை அங்கன்வாடி பள்ளியில் சென்று பாடம் நடத்த சொல்லி பணியிறக்க ஆணை வழங்குவது மனித உரிமை மீறலாகும். இது ஆசிரியர்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
மேலும் உபரியாக இல்லாத ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே வேளையில் இப்பணியிடத்திற்கு முன்பருவக் கல்வி, மாண்டிசோரி பயிற்சி முடித்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளம் பெண்களுக்கு பணியாணை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com