நெல்லையப்பர் கோயிலில் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்'

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்பாள் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் இந்நிகழ்வு ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் மட்டும் இடம்பெறுகிறது. இதையொட்டி மேடையில் நெல்மணிகளை இட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறியது: திருநெல்வேலியைச் சேர்ந்த சிவபக்தரான வேதபட்டர் தினமும் சிவபூஜை செய்து அன்னதானம் வழங்கி வந்தார். ஒருநாள் நெல்லைக் காயவைத்துவிட்டு தாமிரவருணியில் நீராடச் சென்றபோது, மழை பெய்தது. சிவபெருமானை வேண்டியவாறும், நெல் நனைந்துவிடுமே என வருந்தியபடியும் வேதபட்டர் வந்துபார்த்தபோது, நெல் இருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லையாம். இதன்பின்பு, வேணுவனம், நெல்வேலி என அழைக்கப்பட்டு வந்த இப்பகுதி திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலியாக தொடர்கிறது என்றனர் அவர்கள்.
திருவிழாவில் இம்மாதம் 21 ஆம்தேதி பகல் 12.30 மணிக்கு தைப்பூசத் தீர்த்தவாரி விழா கைலாசபுரத்தில் தாமிரவருணிக் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக  சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் சுவாமி நெல்லையப்பர் கோயிலிலிருந்து எஸ்.என். நெடுஞ்சாலை, கீழ்ப்பாலம் வழியாக தைப்பூச மண்டபத்துக்குச் செல்வர். பின்னர், தீர்த்தவாரி முடிந்து, மாலை 6 மணிக்குப் புறப்பட்டு கோயிலை வந்தடைவர்.
22ஆம் தேதி செளந்திர சபா மண்டபத்தில் செளந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சி, 23ஆம் தேதி எஸ்.என்.நெடுஞ்சாலையோரம் உள்ள வெளிதெப்பத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வலம் வருவார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பா. ரோஷிணி, ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com