திருச்செந்தூரில் ஜன.21 இல் தைப்பூச விழா: பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்படுமா?

தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் தென்மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

தைப்பூச திருநாளில் முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் தென்மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளில் போதிய கவனம் செலுத்தப்படாமல் உள்ளது. தெருவிளக்கு, கழிப்பறை வசதிகளை அதிகரிக்க வேண்டுமென பெண் பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. நிகழாண்டுக்கான தைப்பூச விழா இம் மாதம் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. தைப்பூச விழாவில் பங்கேற்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுமார் 30 முதல் 250 கி.மீ. தொலைவுக்கு மேல் பாதயாத்திரையாகச் சென்று வழிபடுகிறார்கள்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆண்கள் மட்டுமன்றி பெண்கள், குழந்தைகளும் பாதயாத்திரை செல்கிறார்கள்.
எண்ணிக்கை அதிகரிப்பு: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறியது: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை எண்ணி மனதை ஒருமுகப்படுத்தி வேண்டுதல் செய்தால் பல்வேறு பலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூருக்கு 8 முதல் 41 நாள்கள் வரை விரதம் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூர், ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்தும் பல பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். இவர்கள் குறைந்தது 3 முதல் 4 இடங்களில் ஓய்வெடுத்து நடையை தொடர்கிறார்கள். பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மயில்காவடி போன்றவற்றுடன் அலகு குத்திக் கொண்டும் பக்தர்கள் செல்கிறார்கள். ஆண்டுதோறும் அதிகரிக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்றார் அவர்.
தெருவிளக்கு, கழிப்பறைகள் தேவை:  மானூர் பகுதியைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கூறியது: கடந்த 5 ஆண்டுகளாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்று வருகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் பிரான்சேரி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய பகுதிகளில் ஓய்வெடுத்து செல்கிறார்கள். அங்கு போதிய கழிப்பறைகள் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தாமிரவருணி மற்றும் பாசனக் கால்வாய்களின் கரையோரம் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் பல இடங்களில் தெருவிளக்குகள் போதிய அளவில் இல்லை. பாதயாத்திரை பக்தர்கள் இரவில்தான் அதிகநேரம் நடப்பதால் தெருவிளக்கு மற்றும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு மின்விளக்கு வசதிகளை மாவட்ட நிர்வாகம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 15 கி.மீ. தொலைவு இடைவெளியில் 10 நடமாடும் கழிப்பறைகளையும் அமைக்க வேண்டும். முடநீக்கியியல் நிபுணர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாமை நடத்த வேண்டும். விபத்து பகுதிகளில் பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் 3 வாரங்களுக்கு மட்டும் ஒளிரும் பிளாஸ்டிக் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கண்காணிப்பு அவசியம்:  ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த முருகபக்தர் கிருஷ்ணன் கூறியது:  திருச்செந்தூர்-தூத்துக்குடி, திருச்செந்தூர்-பாளையங்கோட்டை, கிழக்கு கடற்கரைச் சாலைகளின் வழியாக ஒரு வாரத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். 
ஆகவே, இந்தச் சாலைகளில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைத்து, அனைத்து வாகன ஓட்டிகளிடமும் மெதுவாகவும், கவனமாகவும் செல்ல அறிவுறுத்த வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், ஆயுதப்படை பிரிவு போலீஸாரை கொண்டு சிறப்பு ரோந்து படைகளை அமைத்து கண்காணிக்க வேண்டும். தாமிரவருணி மஹா புஷ்கரவிழாவில் பெண் பக்தர்கள் நீராடவும், உடைகள் மாற்றவும் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, பெண் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல பெண் பக்தர்களுக்காக சிறப்பு ஓய்வறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
விழிப்புணர்வு தேவை:  காவல் துறை வட்டாரங்கள் கூறியது: பெண்கள், குழந்தைகளுடன் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். அதேபோல மாலை 4 முதல் இரவு 11 மணி வரையும், அதிகாலை 4 முதல் காலை 10 மணி வரையும் நடக்கும் வகையில் திட்டங்களை வகுப்பது சிறந்தது. 
ஏனெனில் வயதான பெண்கள், குழந்தைகள் ஆகியோர் நள்ளிரவு நேரத்தில் நடக்கும்போது சிரமங்களைச் சந்திக்கும் அபாயங்கள் உள்ளன. 
நடந்து செல்லும் பக்தர்கள் தங்களது கைகளில் டார்ச் லைட்டுகள், ஆடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பக்தர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
 ஓய்வெடுக்க விரும்பும் பக்தர்கள் சாலையோரம் வெளிச்சம் இல்லாத இடங்களில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். உணவு, உடை ஆகியவற்றை தேவைக்கு அதிகமாக எடுத்துச் செல்லக் கூடாது. தங்கம் உள்ளிட்ட விலைஉயர்ந்த ஆபரணங்களை அதிகளவில் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இந்த அறிவுரைகளை பக்தர்கள் பின்பற்றினால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும் என்றார்.

"தரிசன சலுகை வேண்டும்'
திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோயிலுக்கு மலையடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள், சாய்வுதள பாதை வழியாக தினமும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்கள் கோயிலுக்குச் சென்றதும் பாதயாத்திரையைக் கருத்தில்கொண்டு மிகவும் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், திருச்செந்தூருக்கு பல நூறு கிலோ மீட்டர் தொலைவு நடந்து வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல முடியாமல் கடற்கரை மணலிலேயே முருகப்பெருமானுக்கு சூடம் ஏற்றி பஜனை பாடி வழிபட்டு செல்கிறார்கள். பாதயாத்திரையாக வரும் குழந்தைகள், பெண்களுக்காவது தனியாக தரிசன சலுகை வழங்கி முருகப்பெருமானை தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், அதன்பின்பு இதர பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கவும் பரிசீலிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com