நெல்லை மாவட்டத்தில் 7 இடங்களில் ஜாக்டோ-ஜியோ சாலை மறியல்: 2,684 பேர் கைது
By DIN | Published On : 24th January 2019 02:46 AM | Last Updated : 24th January 2019 02:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ சார்பில் 7 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 1,824 பெண்கள் உள்பட 2,684 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாவட்டத் தலைநகரங்களிலும், வட்ட தலைநகரங்களிலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2ஆவது நாளான புதன்கிழமை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி வட்டா ட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் அருள் மரியஜான், பால்துரை, முருகானந்தம், பாக்கியராஜ், மனோகரன், மோசஸ், ஸ்டான்லி, தங்கராஜ், கற்பகம் ஆகியோர் தலைமை வகித்னர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி, பாபுசெல்வன், மாரிராஜா, ஆசிர் சார்லஸ் நீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் குமாரவேல், மணிமேகலை உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 320 பெண்கள் உள்பட 580 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சாலை மறியலால் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நான்குனேரியில் நடைபெற்ற சாலை மறியலில் 134 பெண்கள் உள்பட 205 பேர், அம்பாசமுத்திரத்தில் 115 பெண்கள் உள்பட 160 பேர், ஆலங்குளத்தில் 172 பெண்கள் உள்பட 237 பேர், தென்காசியில் 550 பெண்கள் உள்பட 749 பேர், சிவகிரியில் 201 பெண்கள் உள்பட 305 பேர், சங்கரன்கோவிலில் 282 பெண்கள் உள்பட 448 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,684 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.