பசுக்களுக்கு இனப்பெருக்க பரிசோதனை, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் இன்று தொடக்கம்
By DIN | Published On : 24th January 2019 02:46 AM | Last Updated : 24th January 2019 02:46 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் கறவைப் பசுக்களுக்கான இனப்பெருக்க மருத்துவ பரிசோதனையும், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான குடற்புழு நீக்க முகாமும் கால்நடை மருத்துவமனைகளில் வியாழக்கிழமை (ஜன.24) தொடங்குகிறது. இந்த முகாம் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள், தங்கள் கால்நடைகளை நன்கு பராமரிக்க வேண்டும் என அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவைப் பசுக்களின் பால் உற்பத்தித் திறனை பெருக்கவும், ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும், தமிழகம் முழுவதும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் கறவைப் பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனையும், ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் விலையில்லா ஆடு, மாடு வழங்கப்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் நடைபெற உள்ளது. விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டுமின்றி, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.