வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம்
By DIN | Published On : 01st July 2019 07:25 AM | Last Updated : 01st July 2019 07:25 AM | அ+அ அ- |

பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 மற்றும் 2018-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட 3-ஆவது மாநாடு, பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கே.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பூ.கோபாலன் முன்னிலை வகித்தார்.
சமீபத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்,தொண்டர்களுக்கு அகில இந்திய காப்பீட்டுத் தொழிலாளர்கள் சங்க கோட்டத் தலைவர் மதுபால் அஞ்சலி செலுத்தினார். மாநில துணைச் செயலர் எம்.கந்தசாமி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.கிருஷ்ணன், நவஜீவன் டிரஸ்ட் இயக்குநர் பி.நளன், களம் இயக்குநர் பரதன், எஸ்சி, எஸ்டி மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜார்ஜ், திராவிடர் தமிழர் கட்சி மாவட்டத் தலைவர் மு.கதிரவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாவட்டப் பொருளாளர் ஆர்.எஸ்.துரைராஜ் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுச் செயலர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். சிறுபான்மை நலக்குழு மாவட்டத் தலைவர் மு.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வரவேற்புக் குழு தலைவர் எஸ்.ராமகுரு வரவேற்றார். வரவேற்புக் குழு செயலர் எம்.சுடலைராஜ் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 மற்றும் 2018-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியான தலித் மக்களுக்கு வீட்டுமனை வழங்கி, அதை உடனடியாக வருவாய்த் துறை மூலம் அளந்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். பயனாளிகளுக்கு ஓர் ஆண்டுக்குள் முன்னுரிமை அடிப்படையில் இலவச வீடு கட்டித் தர வேண்டும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவருக்கான காலி பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பொருத்தமான மாற்றுத் தொழில்களை உருவாக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதிகளில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்ய வேண்டும். திருநெல்வேலி சட்டக் கல்லூரி ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல கோடி ரூபாயில் கட்டப்பட்ட விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அசோக் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம்: மாநாட்டில், திருநெல்வேலி தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பில் சமீபத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் அசோக்கின் உருவப்படத்தை முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவருமான ஆர்.கிருஷ்ணன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.10 ஆயிரம் நிதியை அசோக்கின் குடும்பத்திற்கு அவர் வழங்கினார்.