சாம்பவர்வடகரையில் மின் மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

சாம்பவர்வடகரை பேரூராட்சியில் உள்ளூர் நீராதார கிணற்றின் மின்மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சாம்பவர்வடகரை பேரூராட்சியில் உள்ளூர் நீராதார கிணற்றின் மின்மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சாம்பவர்வடகரை பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு,  தாமிரவருணி கூட்டுக் குடிநீர் மற்றும் உள்ளூர் நீராதாரம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  உள்ளூர் நீராதாரத்தில் பெறப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. 
இதனால், பேருராட்சி சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுமன் நதிக்கரையோரம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திறந்த நிலைக்கிணறு மற்றும் 15 குதிரை திறன்கொண்ட மின்மோட்டார் அமைக்கப்பட்டது. 
இதன்மூலம் பேரூராட்சிப் பகுதியில் முறை வைத்து 2 நாள்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு நல்ல தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இந்தத் திட்டத்தில் அமைக்கப்பட்ட மின் மோட்டார் அடிக்கடி பழுதானதால் அவற்றை சரிசெய்து பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தது.
இந்நிலையில், உள்ளூர் நீராதாரம் மூலம் விநியோகித்து வந்த அனுமன்நதி கிணற்றின் மின்மோட்டார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதாகியும், இதுவரை மின்மோட்டார் சரிசெய்யப்படவில்லை. 
இதனால், வற்றாத இந்தக் கிணற்றில் தண்ணீர் தரை மட்டத்தில் இருந்து 10 அடியில் இருந்தும் நகரில் உள்ள வீடுகளுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்ட தண்ணீர் மட்டுமே வாரத்துக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது.
பிற நாள்களில் அரை மணி நேரம் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத மற்றொரு கிணற்றின் உப்பு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
 வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் விநியோகிக்கப்படும் தாமிரவருணி குடிநீரை பிடித்து வைத்து வாரம் முழுவதும் பயன்பாட்டுக்கு வைப்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அனுமன் நதி கிணற்றின் தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டால் கூடுதல் குடிதண்ணீர் கிடைப்பதோடு, 2 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் நல்ல தண்ணீரை முழுமையாக பயன்படுத்த ஏதுவாக இருக்கும். 
எனவே, பொதுமக்கள் நலன் கருதி அனுமன்நதி கிணற்றின் மின்மோட்டாரை பழுதுநீக்கி அல்லது புதியமின்மோட்டார் பொருத்தி 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com