சுடச்சுட

  

  கூடங்குளம் அணு உலைகளை மூடக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு

  By DIN  |   Published on : 02nd July 2019 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளை மூடக் கோரியும், விஜயாபதி ஊராட்சியில் ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டத்தை மீண்டும் நடத்தக் கோரியும் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்ட மகளிர் பாசறைச் செயலர் ரா.சகாய இனிதா அளித்த மனு: அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்கூட அணுக்கழிவுகளைப் பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், கூடங்குளம் அணுஉலையில் ஆபத்து ஏற்பட்டால் தற்காத்து கொள்வதற்கு பேரிடர் பயிற்சிகூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. இச்சூழ்நிலையில், அணுக்கழிவு பாதுகாப்பு மையம் அமைத்து பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, கூடங்குளம் அணுஉலையை நிரந்தரமாக மூடவும், விஜயாபதி ஊராட்சியில் ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டத்தை மீண்டும் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  குடிநீர்த் தட்டுப்பாடு: சிவகிரி வட்டம், நாரணபுரம் கிராம மக்கள் அளித்த மனு: நாரணபுரம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாரணபுரம் பஜனை கோயில் தெரு, பிள்ளை கோயில் தெரு, தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சமாளித்து வருகிறோம். இதுதொடர்பாக கிராம சபை மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. ஆகவே, எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மடிக்கணினி வழங்க வேண்டும்: ஆலங்குளத்தில் உள்ள மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிகள் அளித்த மனு: மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்றோம். எங்களுக்கு இதுவரை தமிழக அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது 2018-19ஆம் கல்வியாண்டில் பயின்றவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, தகுதியான எங்களுக்கு முதலில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai