முதன்மைநிலை விளையாட்டு விடுதிகளுக்கு ஜூலை 10இல் மாணவர்- மாணவிகள் தேர்வு
By DIN | Published On : 05th July 2019 07:49 AM | Last Updated : 05th July 2019 07:49 AM | அ+அ அ- |

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் 2019-2020 கல்வியாண்டிற்கான மாணவர் - மாணவிகள் சேர்க்கைக்கு மாநில அளவிலான தேர்வுகள் வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயசித்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2019-2020 கல்வியாண்டில் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாகவுள்ள 23 இடங்களுக்கு இரண்டாம் கட்ட மாநில அளவிலான தேர்வுகள் ஜூலை 10ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் தடகளம் (மாணவிகள்), மேசைப்பந்து (மாணவிகள்), ஜிம்னாஸ்டிக் (மாணவர்கள்), நீச்சல் (மாணவர் / மாணவிகள்) ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வுகள் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
மேலும், டென்னிஸ் (மாணவர்கள்) நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கிலும், இறகுப்பந்து (மாணவர்கள்) நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும் தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். இணையதளமுகவரி www.sdat.tn.gov.in விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 9ஆம் தேதி. அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஜூலை 10ஆம் தேதி காலை 8 மணிக்குள் தேர்வு நடைபெறும் மையங்களுக்குள் இருக்க வேண்டும். 6ஆம் வகுப்பில் சேர, 5ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1.1.2019 அன்று 11 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 7ஆம் வகுப்பில் சேர, 6ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 1.1.2019 அன்று 12 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
8ஆம் வகுப்பில் சேர, 7ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 1.1.2019 அன்று 13 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உயரமானவர்களுக்கும், போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் விருதுகள் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.