நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க போராட்டம் அவசியம்: சீதாராம் யெச்சூரி

நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என்றார் மார்க்சிஸ்ட்

நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி.
திருநெல்வேலி தச்சநல்லூர் அருகேயுள்ள கரையிருப்பு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக் கடந்த ஜூன் மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியை அசோக்கின் குடும்பத்துக்கு வழங்கிப் பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் திருநெல்வேலி மண்ணுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. சுதந்திரத்துக்காக பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்கள் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மண்ணில் ஜாதிய படுகொலைகள் நடப்பது என்பது வரலாற்றை பின்னோக்கித் தள்ளும் வகையில் உள்ளது. ஜாதிய ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அசோக்கை இழந்திருக்கிறோம்.
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை முன்னெடுத்து வரும் பாஜக, தேசத்தின் பன்முகத்தன்மைமை சீர்குலைக்க முயற்சிக்கிறது. அதை பாதுகாக்க போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
நாட்டில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. 
கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக குதிரை பேரம் நடத்துகிறது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்மயமாக்க பாஜக முயல்கிறது. 
விவசாயிகளின் நிலங்களைப் பறித்து பெருநிறுவனங்களிடம் வழங்கி அவர்களின் லாபத்தைப் பெருக்குகிறது.
 நீதித்துறையில் தொடங்கி, சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் என அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் நமக்கு பல படிப்பினைகளைத் தந்துள்ளது. தவறுகளை சரிசெய்வோம். மக்களிடம் சென்று பேசி அவர்களைத் திரட்டி பாஜக அரசை எதிர்ப்போம். இந்தியாவை பாதுகாப்போம், இந்தியாவை மாற்றுவோம் என்ற முழக்கத்தோடு சென்று கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.
இக்கூட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலர் பி.உச்சிமாகாளி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.மனேகா வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலர் என்.கே.நடராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ், மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, பி.ராஜகுரு, எம்.சுடலைராஜ், பாளையங்கோட்டை வட்டச் செயலர் வி.கருணா, திருநெல்வேலி வட்டச் செயலர் என்.கைலாஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 
நிகழ்ச்சியில் அசோக்கை பற்றிய பாடல் அடங்கிய குறுந்தகடு, ஆவணப்படம் ஆகியவை வெளியிடப்பட்டன. 
இதில் அசோக்கின் தந்தை முருகன், தாய் ஆவுடையம்மாள் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com