சுடச்சுட

  

  பாளையம் கால்வாயை சீரமைக்க டி.பி.எம். மைதீன்கான் எம்எல்ஏ வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th July 2019 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பாளையம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பாளையங்கோட்டை சட்டப்பேரவை  உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான் வலியுறுத்தியுள்ளார். 
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 42 கி.மீ. தொலைவுள்ள பாளையம் கால்வாய், 8 கி.மீ. தொலைவுக்கு மேல் மாநகர் குடியிருப்புப் பகுதிகளின் வழியாகச் செல்கிறது. இப்பகுதியில் கட்டடக் கழிவுகளும், சாக்கடைக் கழிவுகளும் கலந்து கால்வாய் கூவம் ஆறாக காட்சியளிக்கிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
  கால்வாயில் அதிகரித்துள்ள கழிவுகளால் கடை மடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. கால்வாயை முழுமையாக சீரமைப்பதுடன் சிமென்ட் சுவர் எழுப்பி சாக்கடை தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2009 இல் திமுக ஆட்சியில் திருநெல்வேலியில் 2 ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டது. அதில், தச்சநல்லூர் மேம்பாலப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டில் உள்ளது. 
  ஆனால், குலவணிகர்புரம் மேம்பாலப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. நெரிசால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். 
  கடந்த 6 மாதமாக கிடப்பிலுள்ள தியாகராஜநகர் ரயில்வே மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
  திருநெல்வேலி மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வட்டச் சாலை அமைக்க வேண்டும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை, சந்திப்பு, நகரம், மேலப்பாளையம் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் 24 மணிநேரமும் இயங்கும் பேருந்துகள் இயக்க வேண்டும். 
  மேலப்பாளையத்தில் 100 ஆண்டுகள் பழமையான கன்னிமார்குளம் சுமார் 64 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளத்தில் சாக்கடை நீர் தேங்கி மாசடைந்துள்ளது. விவசாயிகளுக்கும், நிலத்தடி நீர் ஆதாரத்துக்கும் பயன்படும் வகையில் குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  இக்குளத்தை தன்னார்வலர்களுடன் இணைந்து சீரமைப்பு பணியினை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அளித்தும் அனுமதி தரவில்லை. எனவே, கன்னிமார் குளத்தை தன்னார்வலர்கள்உதவியுடன் சீரமைக்க அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  பாளையங்கோட்டை பகுதியில் என்.ஜி.ஓ.ஏ. அ காலனி, வி.எம்.சத்திரம், ஆரோக்கியநாதபுரம், ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதியிலுள்ள குளங்களைத் தூர் வாரி ஆழப்படுத்துவதால் நீர் ஆதாரங்களை பெருக்க முடியும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai