தேசிய மக்கள் நீதிமன்றம் 3,023 வழக்குகளில் தீர்வு; ரூ.14 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,023 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 14 கோடியே 15 லட்சத்து 64 ஆயிரத்து 628  இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. 


திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,023 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 14 கோடியே 15 லட்சத்து 64 ஆயிரத்து 628  இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. 
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 2-ஆவது தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.  
திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை  மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார். 
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அருள் முருகன், 2-ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேவநாதன், குடும்பநல நீதிமன்ற நீதிபதி சந்திரா, மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி,  குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (எண்-1) பாபு, குற்றவியல் நடுவர் நீதிமன்ற (எண்-3) நீதிபதி பழனி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற (எண்-5) நீதிபதி நிஷாந்தினி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி முருகையா ஆகியோர் தலைமையில் 9 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  இதில் மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி கடன் உள்ளிட்ட சமரசம் ஏற்படுத்தக்கூடிய பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 
இதேபோல்,தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், நான்குனேரி, செங்கோட்டை, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய வட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு என மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள  5 ஆயிரத்து 380 வழக்குகள்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 5 ஆயிரத்து 603  வழக்குகள் என மொத்தம் 10 ஆயிரத்து 983 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 
இதில் 3, 023 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.14 கோடியே 15 லட்சத்து 64 ஆயிரத்து 628 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வஷீத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com