Enable Javscript for better performance
குப்பக்குறிச்சியில் அறுவடை வறட்சியால் வைக்கோலுக்கு கடும் போட்டி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குப்பக்குறிச்சியில் அறுவடை வறட்சியால் வைக்கோலுக்கு கடும் போட்டி

    By DIN  |   Published On : 18th July 2019 12:33 AM  |   Last Updated : 18th July 2019 12:33 AM  |  அ+அ அ-  |  


    பாளையங்கோட்டை அருகேயுள்ள குப்பக்குறிச்சியில் முன்கார் பருவ சாகுபடிக்கான அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் நிலவும் கடும் வறட்சியால் இங்கு வைக்கோல் வாங்கிச் செல்வதற்கு வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
       திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி வடிநிலக் கோட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய்கள், நதியுன்னி கால்வாய், கன்னடியன்கால்வாய், கோடகன்கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றின் மூலம் விவசாய நிலங்கள் நேரடியாகவும், பாசன குளங்கள் மூலமாகவும் பாசன நீர் பெற்று வருகின்றன. நேரடி பாசன நிலங்களுக்கு நீர் கிடைத்ததில் இருந்து சுமார் 60 நாள்களுக்கு பின்பே கடை மடை பாசனக் குளங்களின் கீழ் உள்ள விளைநிலங்களுக்கு நீர் கிடைக்கும். குளங்கள் தூர்வாரப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டிருந்தால் இருபோகம் விளைவிக்க முடியும்.
    அறுவடைப் பணிகள் தீவிரம்: அதன்படி திருநெல்வேலி மாவட்ட கடைசிக் கால்வாயான நெல்லை கால்வாய் சுத்தமல்லியில் இருந்து பிரிகிறது. திருநெல்வேலி மாநகரின் வழியாக பாய்ந்தோடி மாநகரின் முக்கிய குளமான நயினார்குளம், ராமையன்பட்டிகுளம், பால்கட்டளைகுளம், அருகன்குளம், ராஜவல்லிபுரம், பள்ளமடை பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பியதும் கடை மடை குளமான குப்பக்குறிச்சி குளத்தை அடைகிறது. அதனால் நெல்லை கால்வாயின் முதல் பகுதிகளில் ஆனி மாதத்தில் கார் சாகுபடி தொடங்கும்போது குப்பக்குறிச்சியில் நீர் இருக்காது. அதனால் அவர்கள் ஐப்பசி மாதத்தில் நேரடியாக பிசானத்தைத் தொடங்குகிறார்கள். அதன்பின்பு சித்திரை இறுதி அல்லது வைகாசி முதல் வாரத்தில் முன்கார் சாகுபடியைத் தொடங்குகிறார்கள்.
     அதன்படி மேல்குப்பக்குறிச்சி குளத்தின் கீழ் உள்ள சுமார் 400 ஏக்கர் விளைநிலங்களில் நிகழாண்டில் முன்கார் சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். அம்பை-16, ஆடுதுறை-45 உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை முடிந்து குளங்கள் ஏப்ரல் மாதமே வறட்சிக்குச் சென்றிருந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் குப்பக்குறிச்சிகுளத்தில் மட்டும் பாசனநீர் போதிய அளவுக்கு இருந்தது. நெல் கதிர்கள் முதிர்ந்த நிலையில் கடந்த சில நாள்களாக குப்பக்குறிச்சியில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரங்களில் மட்டுமன்றி ஆள்களை வைத்தும் அறுவடை செய்து வருகிறார்கள்.
    கடும் போட்டி: இதுகுறித்து குப்பக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியது; எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக முன்கார் சாகுபடியே செய்து வருகிறோம். வழக்கமாக தென்மேற்கு பருவமழையின் இறுதியில்தான் அறுவடை நடைபெறும். நிகழாண்டில் மழையில்லாதது வேதனையளிக்கிறது. ஆனால், நெல்மணிகளை முழுமையாக கரைசேர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 1 குவிண்டால் நெல் கார் பருவஅறுவடையின்போது ரூ.1800-க்கு விற்பனையானது. ஆனால், இப்போது ரூ.2400-க்கு விற்பனையாகிறது. விலை உயர்வினால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
    நடவு, அறுவடை போன்றவற்றுக்கு போதிய ஆள்கள் கிடைக்காததால் மகசூல் செலவு கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. இயந்திர நடவு மற்றும் இயந்திர அறுவடையால் பல்வேறு சேதங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் அதனை சமாளிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருவதால் வைக்கோலுக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், கேரள வியாபாரிகளும் வைக்கோலை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும் உள்ளூரில் கால்நடை வளர்ப்போருக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டுதான் மீதத்தை விற்பனை செய்கிறோம் என்றார்.
    தூர் வார கோரிக்கை: இதுகுறித்து குப்பக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நெல்லை கால்வாய் திருவேங்கடநாதபுரம் அருகே இரண்டாகப் பிரிகிறது. மாநகர பகுதியில் பிளாஸ்டிக், பாதாளச் சாக்கடை, அமலைச்செடிகளால் தண்ணீர் வரத்து மிகவும் தடை படுகிறது. மராமத்து பணிகள் செய்தாலும் கழிவுகள் கலப்பதை முழுமையாக தடை செய்யாமல் உள்ளனர். அதேபோல ராஜவல்லிபுரம், பாலாமடை பகுதிகளில் மறுகால் ஓடைகள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் செய்யப்பட்டாலும்கூட சில இடங்களில் தண்ணீர் தடை படுகிறது. 
    நிகழாண்டில் பருவமழைக்கு முன்பாக ஓடைகளைத் தூர்வார உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும். அதேபோல கரைகளின் இருபுறமும் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என்றார்.
    கவலையளிக்கும் நீர்மட்டம் 
    திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகளில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கும் அளவுக்கு நீர்மட்டம் இருக்கும். ஆனால், நிகழாண்டில் பிரதான அணைகளில் கூட கவலையளிக்கும் வகையிலேயே நீர்மட்டம் உள்ளது. பாபநாசம் அணையில் 46.30 அடியும்,  சேர்வலாறு-58.99 அடி, மணிமுத்தாறு-50.68 அடி, கடனாநதி-25 அடி, ராமநதி-40.75 அடி, கருப்பாநதி-24.61 அடி, குண்டாறு-21.49 அடி, வடக்கு பச்சையாறு- 2.75 அடி, நம்பியாறு- 10.23 அடி, கொடுமுடியாறு-15.50 அடி, அடவிநயினார்-49.25 அடி நீர்மட்டம் உள்ளது. குடியிருப்புகள் அதிகரிப்பு, குளங்களில் வறட்சி போன்றவற்றால் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு பாபநாசம் அணையில் 80 அடிக்கு மேல் நீர் இருப்பு வந்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் நீர்மேலாண்மை சரியில்லாததால்தான் நிகழாண்டில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதாகவும், கால்நடைகளின் தீவனம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய்களில் பாசனத்திற்கு நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp