பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு:மாநகராட்சியில் ரூ. 9.93 லட்சம் அபராதம் விதிப்பு
By DIN | Published On : 19th July 2019 05:18 AM | Last Updated : 19th July 2019 05:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 4, 118 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ. 9.93 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்வது, சேமிப்பது, விநியோகிப்பது, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் தடை செய்த நாளில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 720 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 4 ஆயிரத்து 118 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 9 லட்சத்து 92 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்த்து வருவதை தொடர்ந்து செயல்படுத்தி சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க அனைவரும் உதவ வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.