ரயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்: எஸ்ஆர்எம்யூ வலியுறுத்தல்
By DIN | Published On : 19th July 2019 05:19 AM | Last Updated : 19th July 2019 05:19 AM | அ+அ அ- |

ரயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் என்.கண்ணையா.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது: இந்தியாவில் ரயில்வே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இதில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகிரார்கள். இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏர்இந்தியாவை தனியார்மயமாக்கியதால் பெரிய நஷ்டம் அடைந்துள்ளது. ஆகவே ரயில்வே நிர்வாகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
சென்னையில் இருந்து பெங்களூருக்கும், தில்லியில் இருந்து கொல்கத்தாவுக்கும், தில்லியில் இருந்து மும்பைக்கும் 160 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகள்ரயில் பல மணி நேரம் நின்று செல்லும் நிலை ஏற்படும். இதனால் நடுத்தர மற்றும் பாமர மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, அதிவேக ரயில்களுக்கு என தனி இருப்புப் பாதை அமைக்க வேண்டும். எஸ்ஆர்எம்யூ சங்கம் ரயில்வே ஊழியர்களின் நலனுக்காக எப்போது போராடும். மத்திய அரசால் ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட பல நேரங்களில் நமது சங்கம் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளது. தற்போது ரயில்வே நவீனமயமாக்கல் திட்டத்தால் உபரி தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களை பல்வேறு பிரிவுகளுக்கு மாற்றி அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் நவீனமயமாக்கல் கொள்கையை பொதுமக்களுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் பாதிப்பில்லாமல் நடைமுறைப்படுத்தினால் அதை நாங்கள் வரவேற்போம் என்றார் அவர்.
கண்டனக் கூட்டம்: முன்னதாக, ரயில்வே துறை தனியார்மயமாவதைக் கண்டித்து எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. உதவி கோட்டத் தலைவர் என்.சுப்பையா தலைமை வகித்தார். கோட்டச் செயலர் ஜே.எம். ரபீக், கோட்டத் தலைவர் ரவீச்சந்திரன், உதவி கோட்டச் செயலர் பி.சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலர் என்.கண்ணையா பங்கேற்றுப் பேசினார். திருநெல்வேலி கிளைச் செயலர் எஸ்.ஜே.அய்யப்பன் நன்றி கூறினார். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.