தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடையநல்லூரில் அமைக்க வேண்டும்: பொதுமக்கள், அமைப்புகள் கோரிக்கை

தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடையநல்லூர் இடைகாலில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடையநல்லூர் இடைகாலில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வகையில் தென்காசி மாவட்டம் அமையவுள்ளது. இந்நிலையில், அனைத்து ஊர்களுக்கும் மையத்தில் உள்ள கடையநல்லூரில் ஆட்சியர் அலுவலகம் அமைந்தால் மக்கள் சிரமமின்றி வந்து செல்ல முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
20 ஹெக்டேர் கரடு புறம்போக்கு: கடையநல்லூர் வட்டம், இடைகால் கிராமத்தில் கரடு புறம்போக்கு நிலம் உள்ளது. மதுரை, தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மங்களாபுரம்- சமத்துவபுரம் அருகே இந்தக் கரடு புறம்போக்கு அமைந்துள்ளது. 24 மணி நேரமும் சாலைப் போக்குவரத்து உள்ள இடம் இது என்பதால் இங்கு ஆட்சியர் அலுவலகம் அமைந்தால் பொதுமக்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மேலும், கடையநல்லூர்,செங்கோட்டை வழியாகவும் இந்தச் சாலையின் தொடர்ச்சி உள்ளதால் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இந்த இடத்துக்கு எளிதாக செல்ல முடியும். ஏற்கெனவே, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அரசுக் கல்லூரி இந்தப் பகுதியில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசு ஐடிஐ, அரசு சித்த மருத்துவமனை மற்றும் கல்லூரி, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம், போன்றவையும் இந்தப் பகுதியில்தான் வரவுள்ளன.
நிலமாற்றம்: கடையநல்லூர் வட்டத்துக்குள்பட்ட இடைகால் கிராமம் புல எண் 1இல் இந்தக் கரடு புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தில் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு சித்த மருத்துவமனை மற்றும் கல்லூரி, சித்த மருத்துவப் பல்கலைக்கழம் ஆகியவற்றுக்கு நிலமாற்றம் செய்வதற்கான கோரிக்கைகளை ஏற்று, அந்தந்தத் துறைகளுக்கு இலவசமாக நிலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள சுமார் 5 ஹெக்டேர் நிலம் கரடு புறம்போக்காகவே உள்ளது.
இந்நிலையில், இங்கு அமைவதாக இருந்த வட்டாட்சியர் அலுவலகம் கடையநல்லூர் நகரப் பகுதிக்குள் அமைக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் உறுதியளித்துள்ள நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட 2 ஹெக்டேர் நிலத்தையும் சேர்த்து சுமார் 7 ஹெக்டேர் நிலம் கரடு புறம்போக்காக உள்ளது. எனவே, இந்த இடத்தில் மாவட்ட தலைமையிடம் அமைக்கப்பட்டால் அனைத்துத் துறை அலுவலகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவர முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
போதிய இடவசதி உள்ளது
இதுதொடர்பாக தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் சுலைமான் கூறியது: புதிதாக அறிவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட துறைகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்குத் தேவையான இட வசதி கடையநல்லூர், சமத்துவபுரம் பகுதியில் உள்ளது. தென்காசி, மதுரை சாலை வழியாகவும், கடையநல்லூர், செங்கோட்டை வழியாகவும் இந்த இடங்களை எளிதாக அணுக முடியும். மேலும், வரையறை செய்யப்பட்ட பகுதிகளுக்கு கடையநல்லூர் மையமாக அமையும். எனவே, தமிழக அரசு கடையநல்லூரில் ஆட்சியர் அலுவலகத்தைக் கொண்டு வர வேண்டும் என்றார்.
சோசியல் மனித உரிமைகள் பாதுகாப்புக் கழக நிறுவனர்-தலைவர் பா.மணிகண்டன்: தமிழக அரசு தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள் நீண்ட தொலைவுக்கு அலையக் கூடாது என்ற நோக்கத்துடன் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக அமையவுள்ள ஆட்சியர் அலுவலகமும் மக்களால் எளிதில் செல்லக் கூடிய இடத்தில் அமைக்கப்பட வேண்டும். கடையநல்லூர் பகுதியிலுள்ள 100 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டால், மாவட்டத்தின் அனைத்து எல்லையிலிருந்தும் எளிதாக மக்கள் வந்து செல்ல முடியும் என்றார்.
விதைநெல் வாசகர் வட்டத் தலைவர் ஜெயராம்: மாவட்டம் பிரிக்கப்பட்டதே மக்களின் வசதிக்காகத்தான். அதனால், புதிதாக அமையவுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்களுக்கு மக்கள் எளிதாக செல்லும் வகையிலான இடம் கடையநல்லூர் சமத்துவபுரம் அருகேயுள்ளது. அவ்விடத்தில் அமைக்கப்பட்டால் பேருந்து மூலம் மக்கள் ஆட்சியரகம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முடியும். தனி வாகனங்கள் மூலம் செல்ல வேண்டியதில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com