ஸ்தோத்திர பண்டிகை நிறைவு
By DIN | Published On : 22nd July 2019 07:53 AM | Last Updated : 22nd July 2019 07:53 AM | அ+அ அ- |

ஆலங்குளம் சேகரத்தின் 25ஆவது ஸ்தோத்திர பண்டிகை 8 நாள்கள் கொண்டாடப்பட்டது.
நல்லூர் சேகரத்துடன் இணைந்திருந்த ஆலங்குளம், 1994இல் தனி சேகரமாக உதயமானது. இதன் 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, ஸ்தோத்திர பண்டிகை கடந்த 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வந்தது.
பவனி, சிலுவைக் கொடி ஏற்றம் ஆகிய நிகழ்வுகளுடன் தொடங்கிய இப்பண்டிகையில், அடுத்தடுத்த நாள்களில் சிறப்புப் பட்டிமன்றம், கன்வென்ஷன் கூட்டம், சிறுவர் - சிறுமியரின் பல்சுவை நிகழ்ச்சிகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள்- ஆண்களுக்கென தனித்தனியே கூட்டங்கள், ஞானஸ்நானம் ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. பிரதான ஆராதனையில், திருநெல்வேலி திருமண்டல குருத்துவச் செயலர் பீட்டர் தேவதாஸ் இறை செய்தி அளித்தார். திருமண்டல தலைவர்(பொறுப்பு) பில்லி, லே செயலர் வேதநாயகம், பேராயர் ஜெபச் சந்திரன், மேற்கு சபை மன்றத் தலைவர் சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் நாசரேத் குரூஸ் மாசிலாமணி திருவிருந்து ஆராதனை நடத்தினார். பிற்பகல் வருடாந்திர கூட்டத்தில் ஆலங்குளம் கத்தோலிக்க பங்குத்தந்தை அந்தோணிராஜ் இறைசெய்தி அளித்தார். இரவு கீத ஆராதனை, பஜனை பிரசங்கத்துடன் விழா நிறைவுற்றது. 8 தினங்களும் காலையில் அருணோதய பிரார்த்தனை நடைபெற்றது.
கல்வியில் சிறப்பிடம் பெற்ற மூன்று மாணவர்கள் மற்றும் வேதபாடத் தேர்வுகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. விழா ஏற்பாடுகளை சேகரத் தலைவர் டேனியல் சாலமோன், செயலர் செல்வன் மற்றும் 9 சபை ஊழியர்கள் செய்திருந்தனர்.