"மதிப்புக் கூட்டு இயந்திர மையம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்'
By DIN | Published On : 24th July 2019 07:30 AM | Last Updated : 24th July 2019 07:30 AM | அ+அ அ- |

மதிப்புக் கூட்டு இயந்திர மையம் அமைக்க மானியம் பெற உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு விளை பொருள்கள் மதிப்பு கூட்டு இயந்திர மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
விளை பொருள்ளை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல், பொட்டலமிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு இவை பயன்படும். மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் கொள்முதல் விலை மற்றும் மையம் அமைவிடச் செலவுக்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம், இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. எஞ்சிய 25 சதவீதத் தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழுவின் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.
எனவே, மதிப்புக் கூட்டும் இயந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, உழவர் உற்பத்தியாளர் குழு விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மானாவரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் வழங்க வேண்டும். அந்த விண்ணப்பத்துக்கு ஆட்சியர் ஒப்புதல் அளித்ததும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மதிப்புக் கூட்டு இயந்திர மையம் நிறுவப்படும். அதில், இயந்திரங்கள் திருப்திகரமாக செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், மானியத் தொகை விடுவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திருநெல்வேலி 0462-2552572, தென்காசி 04633-280160, செயற்பொறியாளர், திருநெல்வேலி 0462-2553171 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.