Enable Javscript for better performance
கொலையுண்ட முன்னாள் மேயர் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

  

  கொலையுண்ட முன்னாள் மேயர் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

  By DIN  |   Published on : 25th July 2019 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
  திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவர் உமாமகேஸ்வரி (65). இவர், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்துவந்தார். இவரது கணவர் முருகசங்கரன் (72). இவர்கள், திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் மேலப்பாளையம் அமுதா பீட் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (40) பணிப்பெண்ணாக இருந்தார்.
  செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) இந்த வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்து,  உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரையும் கத்தியால் குத்தியும், இரும்புக் கம்பிகளால் தாக்கிவிட்டும் தப்பியோடியது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலப்பாளையம் போலீஸார் சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரின் சடலங்களும் புதன்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மருத்துவமனை வளாகத்தில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலர் மு. அப்துல்வஹாப் தலைமையில் பல்வேறு கட்சியினரும், உமாமகேஸ்வரியின் உறவினர்களும் திரண்டனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, உமாகேஸ்வரி, முருகசங்கரன் ஆகியோரின் உடல்கள் அவர்களது மகள் கார்த்திகாவின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
  ஸ்டாலின் அஞ்சலி: இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி வந்தார். அவர் உமாமகேஸ்வரி, முருகசங்கரன் ஆகியோரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருநெல்வேலியின் முதல் மேயராக இருந்த உமாமகேஸ்வரி மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்றினார்; அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவைகள் செய்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி பாராட்டும் வகையில் செயல்பட்டவர். அவருக்கு திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பாவேந்தர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  இந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இச்சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். உமாமகேஸ்வரியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
  முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமிபாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் ஹெலன் டேவிட்சன், தங்கவேலு, பேரவை உறுப்பினர்கள் டி.பி.எம். மைதீன்கான் (பாளையங்கோட்டை), பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்), திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே. சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், மதிமுக மாவட்டச் செயலர்கள் கே.எம்.ஏ. நிஜாம், தி.மு. ராஜேந்திரன், தமமுக மாவட்டத் தலைவர் கண்மணிமாவீரன் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் உமாமகேஸ்வரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


  துப்பு துலங்கவில்லை
  திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் துப்பு துலங்காததால் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியது:
  உமாமகேஸ்வரியின் வீட்டின் அருகே ஒரு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் 3 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளனர். அவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இதுதவிர அப்பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், உறவினர்கள், தினமும் வீட்டுக்கு வந்து செல்லும் நபர்களிடமும் விசாரித்துள்ளோம். விரல் ரேகைகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு, முன்விரோதம் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். நகைகள் குறைந்த அளவிலேயே திருட்டு போயிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் கொலை குறித்து இதுவரை துப்பு துலங்காமல் உள்ளது. இருப்பினும் விசாரணை துரிதமாக நடைபெறுவதால் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai