Enable Javscript for better performance
சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி மறுப்பு: பக்தர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி மறுப்பு: பக்தர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல வனத் துறையினர் புதன்கிழமை திடீரென அனுமதி மறுத்ததால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் உள்ள காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு நிகழாண்டு இம்மாதம் 31இல் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 17ஆம் தேதி கால்நாட்டுதல் நடைபெற்றது. 
    அன்றுமுதல் ஆயிரக்கணக்கானோர் விரதமிருந்து, ஆடி அமாவாசை நாளில் பூக்குழி இறங்கியும், பொங்கலிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும், விரதமிருக்கும் பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சில நாள்கள் முன்பாகவே இக்கோயிலுக்குச் சென்று, வனப் பகுதியில் குடில்கள் அமைத்துத் தங்குவது வழக்கம்.
    இந்நிலையில், விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு புதன்கிழமை வந்தனர். சமையலுக்கும், குடில்கள் அமைப்பதற்கும் தேவையான பொருள்களுடன் வேன், லாரிகளில் காலையில் வந்தனர்.
    அப்போது,  குடில்கள் அமைத்துத் தங்க இப்போதே அனுமதிக்க முடியாது; ஆடி அமாவாசை நாளுக்கு 2 நாள்களுக்கு முன்புதான் அனுமதிக்க முடியும் எனக் கூறி, அவர்களை பாபநாசம் வனத் துறை சோதனைச் சாவடியில் வனத்  துறையினர் தடுத்தனர். இதனால், பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி வந்து பக்தர்களிடமும், வனத் துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். 
    கோயிலுக்குச் சென்று தங்குவோர் வனப் பகுதியில் எவ்வித சேதமும் ஏற்படுத்த மாட்டோம் என்றும், வனப் பகுதியில் ஏதேனும் நேர்ந்தால் தாங்களே முழுப் பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துச் செல்ல பக்தர்களிடம் கூறப்பட்டது. அவ்வாறே அவர்கள் எழுதிக் கொடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
     

     

    28 ஆம் தேதிமுதல் பக்தர்கள் தங்க அனுமதி
    சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஜூலை 31இல் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதையடுத்து பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்த ஆலோசனைக் கூட்டம், சார்ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
    சார் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1வரை கார், வேன், இருசக்கர வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. 
    எனவே பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். 
    பேருந்துகளில் பக்தர்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு கட்டணம் கிடையாது. ஒரு நபருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
    நான்கு சக்கர வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பல்லுயிர்க் கோளமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வனப்பகுதிக்குள் மது, சிகரெட், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு வனப்பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் பாதுகாப்பிற்காகவும், பக்தர்கள் பயன்பாட்டிற்கான பணிகள் நிறைவடையாததாலும் ஜூலை 28 முதல் மட்டுமே பக்தர்கள், பொதுமக்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவுகள் எடுக்கப்பட்டன.
    கூட்டத்தில் வனத்துறை, கோயில் நிர்வாகம், காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai