Enable Javscript for better performance
நெல்லையில் ஆகஸ்ட் 7 இல் மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையில் ஆகஸ்ட் 7 இல் மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

    By DIN  |   Published on : 25th July 2019 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்ட அளவிலான மேல்நிலைப்பள்ளி மாணவர்- மாணவிகளுக்கு தமிழில் கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 7இல்  நடைபெறவுள்ளன.
    இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேல்நிலைப் பள்ளி மாணவர்- மாணவிகளிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழில் கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்த ஆட்சியர் தலைமையின்கீழ் அரசாணைப்படி ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  
    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000,  இரண்டாவது பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இப்போட்டிகள் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். போட்டிகள் பற்றிய விவரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக  பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்.
    போட்டியின்  தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்மொழி இலக்கியம் குறித்த வகையில் அமையும்.  ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
    ஆகஸ்ட் 9 இல் கல்லூரி மாணவர்களுக்கு: இது போல, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்- மாணவியருக்கான கவிதை,  கட்டுரை, பேச்சுப்  போட்டி திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆகஸ்ட் 9 இல் நடைபெறுகிறது. 
    மாவட்ட அளவில் இப்போட்டிகளில்  வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாவது பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக  ரூ. 5,000, பாராட்டுச் சான்றிதழ்கள்  வழங்கப்படும்.  போட்டிகள் பற்றிய விவரங்கள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாக  கல்லூரிகளுக்கு  தெரிவிக்கப்படும்.
    தலைப்புகள் பெரும்பாலும் தமிழ் மொழி இலக்கியம் குறித்த வகையில் அமையும்.  ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர் சென்னையில்  மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai