வள்ளியூரில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
By DIN | Published On : 29th July 2019 07:21 AM | Last Updated : 29th July 2019 07:21 AM | அ+அ அ- |

வள்ளியூர் பேரூராட்சியில் குடிநீர்விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வள்ளியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இது தவிர அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. வள்ளியூர் பேரூராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான கொடுமுடியாறு கிணற்றில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. தளவாய்புரம் நம்பியாற்று உரைகிணறிலும் நீர்மட்டம் குறைந்து போதிய தண்ணீர் எடுக்கமுடியவில்லை. இது தவிர தாமிரவருணி கூட்டுக்குடிநீர் ஒப்பந்தப்படி 14 லட்சம் லிட்டர் வழங்கப்படுவதற்கு பதிலாக 7 லட்சம் லிட்டருக்கும் குறைவாகத்தான் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பேரூராட்சி நிர்வாகத்தினால் போதுமான குடிநீர் வழங்க இயலவில்லை. 4 நாள்களுக்கு ஒரு முறை குறைவான அளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் இணைப்புகளில் சிலர் மின்மோட்டாரைப் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு போதுமான தண்ணீர் வருவதில்லை. எனவே,குடிநீர் இணைப்புகளில் முறைகேடு செய்வோர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.