முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
குடிநீர் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் முற்றுகை
By DIN | Published On : 30th July 2019 10:04 AM | Last Updated : 30th July 2019 10:04 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகேயுள்ள குத்துக்கல் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முத்தூர் ஊராட்சிக்குள்பட்ட குத்துக்கல் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். தொடர்ந்து குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியது: குத்துக்கல் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு மாதத்தில் 2 நாள்கள் மட்டுமே தாமிரவருணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் தண்ணீரைச் சேமித்து வைக்க போதிய மேல்நிலைத் தொட்டியும் இல்லாததால், குடிப்பதற்கு விநியோகிக்கும் ஆற்றுநீர் 2 நாள்களில் தீர்ந்து விடுகிறது. இந்நிலையில் எங்கள் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆழ்துளை குழாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அதற்கு அருகேயுள்ள கிராம மக்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இவ் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி எங்கள் பகுதிக்கு ஆழ்துளைக் குழாய் அமைத்துக் கொடுக்கவும், தாமிரவருணி குடிநீரை வாரத்தில் இரு நாள்கள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர்த் தட்டுப்பாடு: கீழமுன்னீர்பள்ளம் ஊராட்சிக்குள்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதி மக்கள் அளித்த மனு: ஜெ.ஜெ.நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தாமிரவருணி குடிநீர் போதிய அளவில் விநியோகிக்கப்படுவதில்லை. இதனால் குடிநீருக்காக நீண்ட தொலைவு சென்று எடுத்து வர வேண்டிய அவலநிலை உள்ளது. இதேபோல சாலை வசதியும் போதுமான அளவில் இல்லை. ஆகவே, ஜெ.ஜெ.நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடைபடும் நீரோட்டம்: ராஜவல்லிபுரம் அருகேயுள்ள பாலாமடை கிராமத்தைச் சேர்ந்த தாமிரவருணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு: எங்கள் ஊரில் ஓடும் தாமிரவருணி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதால் படித்துறைக்கு வரும் தண்ணீர் ஆற்றுக்குள் சாலை அமைத்து தடுக்கப்பட்டது. மணல் குவாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி ரத்து செய்யப்பட்ட நிலையிலும், மணல் குவாரிக்கான சாலை அகற்றப்படவில்லை. இப் பகுதியில் உள்ள கோயில்களுக்கு படித்துறையில் இறங்கி நீர் எடுப்பது வழக்கம். ஆனால், நீரோட்டம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் நீரோட்டத்தை சரிசெய்து தண்ணீரை படித்துறைக்கு திருப்ப முயற்சித்தோம். ஆனால், இப்பணியை செய்ய விடாமல் பொதுப் பணித் துறையினர் தடுக்கின்றனர். ஆகவே, நதியை தூய்மை செய்து படித்துறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துக் கேட்புக் கூட்டம் தேவை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமஜக, தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு: தமிழ் வழிக் கல்வி நிலைப்பாட்டுக்கும், மாநில அரசின் கல்வி உரிமைக்கும் பெரும் கேடு உருவாக்கும்விதமாகவும், இந்தி மொழியை திணிக்கும் வகையிலும் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதாக செய்திகள் வருகின்றன. கல்விக் கொள்கை முழுவதும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதால் எளிய பொதுமக்கள் அவற்றைப் படித்து தெரிந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் வகையில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கவும், அறிவிப்புக்கு பின்னர் பத்து நாள்கள் அவகாசம் அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசனத்துக்கு தண்ணீர் தேவை: கன்னடியன் கால்வாய் விவசாய சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு: கன்னடியன் கால்வாய் பாசனத்தின் கீழ் சுமார் 12,500 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. இருபோக விவசாய நிலங்களான இவை விவசாயம் செய்யப்படாமல் வறண்ட நிலையில் உள்ளன. விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனமின்றி சிரமப்படுகின்றனர். கால்வாயில் 10 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால், இந்த நிலங்களில் தீவனங்களாவது கால்நடைகளுக்கு கிடைக்கும் என்பதால் தண்ணீர் திறக்க வேண்டும்.
கால்வாயில் மாசு: நெல்லை மாவட்ட பொதுநல அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு: வீ.கே.புதூரில் உள்ள கால்வாய் மூலம் தண்ணீர் வீராணம் குளத்தை அடைந்து அங்கிருந்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில், வீ.கே.புதூர் பகுதியில் குப்பைகள், கழிவுநீர் போன்றவை கால்வாய்க்குள் நேரடியாக கலக்கிறது. இதைத் தடுக்கவும், கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.