முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பக்ரீத் பண்டிகையால் விலை ஏற்றம்: கடையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
By DIN | Published On : 30th July 2019 07:35 AM | Last Updated : 30th July 2019 07:35 AM | அ+அ அ- |

பக்ரீத் பண்டிகையையொட்டி, குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள் வாங்கப்பட்டு வரும் நிலையில், கடையம் சந்தையில் ஆடு விற்பனை திங்கள்கிழமை குறைவாகவே இருந்தது.
பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பல்வேறு சந்தைகள் மற்றும் தனியாரிடம் ஆடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளான கடையம், மேலப்பாளையம், சிவராமபேட்டை உள்ளிட்டவற்றில் விற்பனைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடையம் சந்தையைப் பொருத்தவரை, திங்கள்கிழமை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500-க்கும் அதிகமான வடக்கத்தி குட்டி, நாட்டு குட்டி, மயிலம்பாடி குட்டி, பண்ணைவகை ஆடுகளான பெங்களூரு குட்டி உள்ளிட்ட பலவகை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
பொட்டல்புதூர், கடையம், சம்பன்குளம், ரவணசமுத்திரம், தென்காசி, அம்பாசமுத்திரம், பத்தமடை உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். ஆனால், ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால், விற்பனை குறைவாகவே இருந்தது.
இதுகுறித்து வீராசமுத்திரம் முகம்மது யூசுப் கூறியது: நிகழாண்டில் ஆட்டின் விலை வழக்கத்தைவிட மிகவும் அதிகமாக உள்ளது. பொதுவாக, கிலோ ரூ. 300 முதல் ரூ. 400 வரை இருந்த நிலையில், இன்று இங்கு கிலோவுக்கு ரூ. 1000 வரை விலை வைக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடு வாங்குவதற்குத் தயங்குகிறார்கள். மேலும், தற்போது நிலவிவரும் கடும் வறட்சியால், ஆடுகளுக்குத் தேவையான தீவனங்கள் கிடைப்பதும் அரிதாக உள்ளது என்றார்.
இந்த வாரச் சந்தையில் வியாபாரிகள் ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை வாங்கிச் சென்றாலும், மொத்தத்தில் 200-க்கும் குறைவான ஆடுகளே விற்பனையாகின