முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
முன்னாள் மேயர் கொலை வழக்கு: திமுக பிரமுகர் சீனியம்மாள் மகனிடம் விசாரணை: ரத்தக் கறை படிந்த உடைகள் சீவலப்பேரியில் மீட்பு
By DIN | Published On : 30th July 2019 10:05 AM | Last Updated : 30th July 2019 10:05 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனிடம் (35) போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீஸார், ரத்தக் கறை படிந்து, பாதி எரிந்த நிலையிலிருந்த அவரது உடைகளை சீவலப்பேரி பகுதியில் மீட்டுள்ளனர். மேலும், சீவலப்பேரி சாலையில் கார்த்திகேயன் மறைத்து வைத்துள்ள 21 பவுன் தங்க நகைகளைத் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவர் உமா மகேஸ்வரி (65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 23ஆம் தேதி உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் (72), வீட்டுப் பணிப் பெண் மாரியம்மாள் (40) ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல் 5 நாள்களில் துப்பு எதுவும் துலங்காத நிலையில், கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டாரங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
காட்டிக்கொடுத்த கார்: அப்போது, சம்பவம் நடந்த நாளில் உமாமகேஸ்வரியின் வீட்டருகே கார் ஒன்று சுற்றித் திரிந்ததும், அதில் சென்றவர் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர் தனி ஒருவராகவே 3 பேரையும் கொன்றதாகத் தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டாரங்களில் அடிக்கடி சென்று வந்த கார் யாருடையது என விசாரித்தபோது, அது திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுடையது எனத் தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
நடந்தே சென்ற கார்த்திகேயன்...: உமாமகேஸ்வரியை கொல்லத் திட்டமிட்ட கார்த்திகேயன், தனது காரை என்ஜிஓ காலனி பகுதியில் நிறுத்திவிட்டு 1 கி.மீ. தொலைவு நடந்தே உமா மகேஸ்வரி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, போலீஸாரிடம் சிக்காமலிருக்க செல்லிடப்பேசியை கையில் எடுத்துச் செல்லாமல், காரிலேயே விட்டுச் சென்றுள்ளார்.
உமா மகேஸ்வரியின் வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகேயன், முதலில் முருகசங்கரனையும், பிறகு உமா மகேஸ்வரியையும் கொன்றுள்ளார். அதைப் பார்த்த பணிப்பெண் மாரியம்மாள் கூச்சலிடவே அவரையும் கொன்றுள்ளார்.
பிறகு, தடயங்களை அழித்துவிட்டு, 21 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.
ரத்தக் கறை படிந்த உடைகள்..: பின்னர், காரில் ஏறி சீவலப்பேரி சாலையில் சென்று, அங்கு நகைகளை மறைத்துவைத்துவிட்டு, ரத்தக் கறை படிந்த தனது உடைகளை சீவலப்பேரி பகுதியில் எரித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில், பாதி எரிந்த நிலையிலிருந்த உடைகளைக் கைப்பற்றியுள்ளோம். அதேநேரம், நகைகளைத் தேடும் பணி நடைபெறுகிறது.
இதுவரை நடைபெற்ற விசாரணையில், 3 பேரையும் கார்த்திகேயனே கொன்றது தெரியவந்துள்ளது. அரசியல் முன்விரோதம், கொடுக்கல் - வாங்கல் பிரச்னை காரணமாக இச்சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். சீனியம்மாளுக்கு கிடைக்க வேண்டிய மேயர் பதவியை உமா மகேஸ்வரி தட்டிப் பறித்ததாகவும், எம்எல்ஏ சீட்டுக்காக சீனியம்மாள், உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால், சீட் கிடைக்காத நிலையில் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே கார்த்திகேயன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கார்த்திகேயன் திருநெல்வேலி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.