மூளை ரத்தக் கசிவுக்கு நவீன சிகிச்சை: நெல்லை ஷிபா மருத்துவமனை சாதனை
By DIN | Published On : 30th July 2019 10:05 AM | Last Updated : 30th July 2019 10:05 AM | அ+அ அ- |

பெண்ணின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு பிரச்னையை நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தி திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் முஹம்மது அரபாத் கூறியது:
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பெனினாள்(45) என்பவர் தலைவலி சிகிச்சைக்காக ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இவரது மூளையில் ரத்தக் கசிவு மற்றும் அனுரிசம் இருப்பது கண்டறியப்பட்டது. இவருக்கு திறந்த வெளி அறுவைச் சிகிச்சை செய்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, என்டோவாஸ்குலர் அனுரிசம் காலிங் என்னும் அதிநவீன சிகிச்சைமுறையில் தொடையில் உள்ள ரத்த நாளத்தின் வழியாக மூளையில் உள்ள ரத்த நரம்பு வீக்கம் மற்றும் ரத்தக் கசிவை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த நவீன சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில் பாபு, எண்டோவாஸ்குலர் மூளை நரம்பியல் ரத்த நாள அறுவைச் சிகிச்சை நிபுணர் கௌதம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இணைந்து மூளையில் உள்ள ரத்த நரம்பு வீக்கம் மற்றும் ரத்த கசிவை வெற்றிகரமாக அகற்றினர்.
இதற்கான மருத்துவ உபகரணங்கள் சென்னையில் மட்டுமே இருந்த நிலையில், தற்போது, ஷிபா மருத்துவமனையிலும் அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "சீமன்ஸ் ஆர்டிஸ் ஒன் - கேத் லேப்' என்ற இந்த உபகரணம் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி குணமடைந்துள்ளார். ஓரிரு வாரங்களில் அவருடைய வழக்கமான வேலைகளை செய்ய முடியும் என்றார்.
பேட்டியின் போது, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில் பாபு உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.