ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 12th June 2019 07:11 AM | Last Updated : 12th June 2019 07:11 AM | அ+அ அ- |

தமிழக அரசைக் கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆலங்குளத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் ஆலங்குளம் வட்ட கிளை சார்பில், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சங்கர குமார், பொறியாளர் சங்க நிர்வாகி சந்திரலேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கங்காதரன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பழனி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சித் துறை வட்ட இணைச் செயலாளர் சிங்கராஜ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.