பணகுடியில் மேம்பாலப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 12th June 2019 07:09 AM | Last Updated : 12th June 2019 07:09 AM | அ+அ அ- |

பணகுடி புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
பணகுடி புறவழிச் சாலையில் தொடர் விபத்துகள் நிகழ்ந்து வந்தன. எனவே, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சியால் ரூ.48 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாலப் பணிகள் இம்மாதம் தொடங்கிய நிலையில், மேம்பாலத்தை 6 வழிச் சாலையாக அமைப்பதற்கான திட்டவடிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, புறவழிச் சாலையையொட்டிய பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராதாபுரம் வட்டாட்சியர் செல்வன் முன்னிலையில், நிலஅளவையர்கள், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், காவல்துறையினர் மேற்பார்வையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 75 சதவீத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, குடியிருப்புப் பகுதிகள், ஓடு தொழிற்சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முயன்றபோது, பட்டா நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் பகுதிகளை மீண்டும் அளவை செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.