உள்ளாட்சி வார்டுகளின் மறுவரையறையை மாற்றக் கோரி மனு

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் மறுவரையறையை மாற்றக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் மறுவரையறையை மாற்றக் கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், கடங்கனேரி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் வாக்காளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளோம். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் 14ஆவது வார்டின் கீழ் எங்கள் பகுதி இருந்தது. இந்நிலையில், வார்டுகள் மறுவரையறையில் சுமார் 800 வாக்காளர்களை 11ஆவது வார்டின் கீழ் காவலாகுறிச்சி பகுதியுடன் சேர்த்துள்ளனர். அங்கு வெவ்வேறு சமூகங்கள் உள்ளதால் பிரச்னைகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. எங்கள் வார்டு ஒன்றிய உறுப்பினரை பலமுறை ஊர் ஒற்றுமையுடன் ஒருமனதாக தேர்வு செய்து உரிமையை நிலைநாட்டியுள்ளோம். ஆனால், மறுவரையறையில் உரிமையை முற்றிலும் பறிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, மறுவரையறையை உடனடியாக மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நவோதயா பள்ளிக்கு நிலம் வழங்கத் தயார்: திருவேங்கடம் வட்டம், மருதங்கிணறு தெற்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டியன், ஆட்சியரிடம் அளித்த மனு:
மத்திய அரசின் நவோதயா பள்ளியை எங்கள் கிராமத்தில் அமைக்க வேண்டும். நவோதயா பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கும், ஆசிரியர் குடியிருப்பு கட்டுவதற்கும் என்னுடைய சொந்த விவசாய நிலத்தை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன். எனவே, எங்கள் கிராமத்தில் நவோதயா பள்ளி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கோழிப் பண்ணைகளால் சுகாதாரக் கேடு: சேர்வைகாரன்பட்டி ஊராட்சி மயிலானூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:
அம்பாசமுத்திரம் வட்டம் சேர்வைகாரன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மயிலானூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். இந்த ஊரில் வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் சிறுதொழில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊருக்குள் சிலர் கோழிப் பண்ணை அமைத்துள்ளனர். இந்தக் கோழிப்பண்ணையானது கோயில், அங்கன்வாடி ஆகியவற்றுக்கு அருகிலும், பொதுமக்கள் வாழும் இடத்திலும் அமைந்துள்ளது.  கோழிப் பண்ணையால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக கடையம் சுகாதார ஆய்வாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, எங்கள் ஊரில் சுகாதாரமாக வாழ வழி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாடகை கார் ஓட்டுநர்கள் மனு: ஆலங்குளம் சுற்றுவட்டார டூரிஸ்ட் கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் அளித்த மனு: ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் முறையான அரசு அனுமதி பெற்று வாடகை கார் நிறுத்துமிடம் அமைத்து தொழில் செய்து வருகிறோம். ஆனால், சொந்த பயன்பாட்டுக்காக வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதை வாடகை வாகனங்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக தென்காசி மோட்டார் போக்குவரத்து ஆய்வாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்தப் புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com