சுரண்டை அரசு கலைக் கல்லூரிக்கு எம்எல்ஏ சொந்த நிதியில் மின்விசிறிகள்
By DIN | Published On : 18th June 2019 10:05 AM | Last Updated : 18th June 2019 10:05 AM | அ+அ அ- |

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் கலையரங்கம் முழுவதற்கும் தனது சொந்த நிதியில் இருந்து மின்விசிறிகளை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை வழங்கினார்.
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மார்ச் மாதம் நடைபெற்ற ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாணவர், மாணவிகள் அனைவரும் கலையரங்கில் மின்விசிறி வசதி இல்லாமல் அவதியுறுவதைக் கண்டு, தனது சொந்த நிதியில் இருந்து கலையரங்கம் முழுவதற்கும் மின்விசிறி வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி திங்கள்கிழமை காலை கல்லூரிக்கு வந்த அவர், தான் அளித்த வாக்குறுதியின்படி கலையரங்குக்கு தேவையான மின்விசிறிகளை வாங்கி வந்து கல்லூரி முதல்வர்(பொ) ரா.ஜெயாவிடம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துறைத் தலைவர்கள் பரமார்த்தலிங்கம், பீர்கான், மோகன கண்ணன், ஸ்டீபன் டேவிஸ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மெர்லின் சீலர்சிங், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.