தாழையூத்து-ராஜவல்லிபுரம் சாலையில் பள்ளத்தால் விபத்துகள் அதிகரிப்பு
By DIN | Published On : 18th June 2019 10:04 AM | Last Updated : 18th June 2019 10:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து-ராஜவல்லிபுரம் சாலையில் குடிநீர்க் குழாய் உடைப்பு காரணமாக ஏற்பட்ட பள்ளம் மூடப்படாததால் விபத்துகள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ராஜவல்லிபுரம், பாலாமடை பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் சங்கர்நகர், தாழையூத்து பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தாழையூத்து-ராஜவல்லிபுரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கில் வாகனப் போக்குவரத்து இருக்கும். இச்சாலையோரம் இருந்த குடிநீர்க் குழாயில் சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் சாலையோரம் பெரிய பள்ளம் உருவானது. குழாய் சீரமைக்கப்பட்ட பிறகும், பள்ளம் மூடப்படாததால் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. பருவமழை தொடங்கினால் இந்தப் பள்ளம் மேலும் பெரிதாகி போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. ஆகவே, இந்தப் பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.