புளியங்குடி அருகே பைக் விபத்தில் பெண் பலி
By DIN | Published On : 18th June 2019 09:49 AM | Last Updated : 18th June 2019 09:49 AM | அ+அ அ- |

புளியங்குடி அருகே சாலையோரப் பள்ளத்தில் பைக் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.
மலையடிகுறிச்சி வடகாசியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி முத்தாச்சி (40). இவரும், இவருடைய தோழி புளியங்குடி ஆரியங்காவு கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த ராமர் மனைவி ராமேஸ்வரியும் (36) பைக்கில், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையநல்லூர் சென்றுவிட்டு ஊருக்கு வந்துகொண்டிருந்தனர்.
பைக்கை முத்தாச்சி ஓட்டிவந்தாராம். தென்காசி-மதுரை சாலையில் புளியங்குடி மின்வாரிய அலுவலகம் அருகே இருவரும் வந்தபோது எதிர்பாரதவிதமாக பைக் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்தாச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சொக்கம்பட்டி போலீஸார் அங்கு சென்று முத்தாச்சி சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பலத்த காயமடைந்த ராமேஸ்வரி, தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.