வீரகேரளம்புதூர் கால்வாய், சிற்றாறு மாசுபடுவதை தடுக்கக் கோரிக்கை
By DIN | Published On : 18th June 2019 10:00 AM | Last Updated : 18th June 2019 10:00 AM | அ+அ அ- |

வீரகேரளம்புதூர் கால்வாய் மற்றும் சிற்றாறு மாசுபடுவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது நல அமைப்பினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனு:
வீரகேரளம்புதூர் கால்வாய் பல நூற்றாண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கும், வெற்றிலை பதனிடுதல் உள்ளிட்டவற்றுக்கும், நிலத்தடி நீர் பெருக்கத்துக்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்தக் கால்வாய் நீர் வீராணம் குளத்துக்குச் சென்று அங்கு சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கும் பயன்பட்டது.
ஆனால், இப்போது குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், கடைக் கழிவுகள், கழிவு நீர் ஆகியவற்றால் குளம் பாழாகி, அதன் இயற்கைத்தன்மையை இழந்துள்ளது. எனவே, வீரகேரளம்புதூர் கால்வாய் மற்றும் சிற்றாறு மாசுபடுவதை தடுக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
கடையநல்லூர் வட்டம் அரியநாயகிபுரம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் அளித்த மனு: எங்கள் பகுதியில் சுமார் 75 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்த நிலத்தடி நீர் வசதியில்லை.
தாமிரவருணி குடிநீர் வாரம் இருமுறை மட்டுமே கிடைக்கிறது. எனவே, எங்கள் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர்த் தொட்டி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.