தாமிரவருணி பாசனத்தில் மணல் மேடுகளால் தூர்ந்துபோன 53 குளங்கள் அ.தினகரன்

தாமிரவருணி பாசனத்தில் மணல்மேடுகளால் தூர்ந்துபோன 53 குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தாமிரவருணி பாசனத்தில் மணல்மேடுகளால் தூர்ந்துபோன 53 குளங்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் தாமிரவருணி ஆற்றின் பாசன வசதிகளுக்காக எட்டு அணைகள் கட்டப்பட்டு, அதிலிருந்து பதினொரு வகை பிரிகின்றன.
இதில் 6 அணைக்கட்டுகள், 7  வாய்க்கால்கள் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 40,000 ஏக்கர் நன்செய் நிலங்களும், 2 அணைக்கட்டுகள்,  4 வாய்க்கால்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
வடகிழக்குப் பருவமழை காலமான அக்.15 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை பிசான சாகுபடி எனவும், தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் 15 முதல் செப். 15 வரை கார் சாகுபடி எனவும் அணைகளில் தண்ணீர் இருப்பை பொருத்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதுதவிர பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் இருப்பை பொருத்து, ஏப்ரல், மே மாதங்களில் முன்கார் சாகுபடிக்கு என தண்ணீர் திறந்து விடப்பட்டு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் அணையான மருதூர் அணையின் மூலம் கீழக்கால் நேரடி பாசனம் 2970 ஏக்கர் போக, பட்டர் குளத்திலிருந்து பெருங்குளம் வரை 15 குளங்கள் மூலம் 4815 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றன.
மேலக்கால் நேரடி பாசனம் 4554 ஏக்கர் போக முத்தாலங்குறிச்சி குளத்திலிருந்து தேமாங்குளம் வரை 15 குளங்கள் மூலம் 8208  ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் நேரடி பாசனம் 3289 ஏக்கர் போக, ஆறுமுகமங்கலம் குளத்திலிருந்து கோரம்பள்ளம் வரை ஏழு குளங்கள் மூலம் 9511 ஏக்கரும், தென்கால் நேரடி பாசனம் 2693 ஏக்கர் தவிர்த்து, கடம்பாகுளத்திலிருந்து ஆவுடையார் குளம் வரை 15 குளங்கள் மூலம் 10,067 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.
இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதான கால்வாய்கள் மூலம் நேரடி பாசனம் பெறும் 13,506 ஏக்கர் தவிர்த்து மீதமுள்ள 32,601 ஏக்கர் 53 குளங்கள் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த 53 குளங்களின் கொள்ளளவு 2274.27 மில்லியன் கன அடி ஆகும்.
இக்குளங்கள் அனைத்தும் தற்போது தனிநபர்களின் ஆக்கிரமிப்புகள், கருவேலமரங்கள் மற்றும் ஊமத்தை செடிகளின் ஆக்கிரமிப்புகள் என சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை மணல் மேடாகி உள்ளன.
இதனால் குளங்களின் கொள்ளளவு சுமார் 750 மில்லியன் கன அடியாக குறைந்து, மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக பல்லாயிரக்கணக்கான கன அடி தண்ணீர் ஆண்டுதோறும் வெளியேறி வருகிறது.
இதனால், கோடை காலங்களில் நடைபெறும் முன்கார் சாகுபடியில், தற்போது முழுமையாக தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. 
கடந்த 1994ஆம் ஆண்டு முதல் கார் சாகுபடியும் முறையாக நடைபெறவில்லை. அதோடு பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதாலும், இருபோக சாகுபடி என்பது இப்போது ஒருபோகமானது.  
ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால் வாய்க்கால் மூலம் 7 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால் தற்போது தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் தூர்ந்துபோய் உள்ளது.
இதைபோல், தென்கால் வாய்க்கால் பராமரிப்புப் பணி கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் முறையாக பணிகள் நடைபெறாததால் கடைசி குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் தாமிரவருணி பாசனத்தில் விவசாயத்துக்கு என தண்ணீர் திறப்பதற்காக அரசு அறிவிக்கும் அறிவிப்புகள் அனைத்தும் பயனற்றதாகி விடுகின்றன.
பாசனக் குளங்களையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு என பலமுறை திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பியும், அரசின் முறையான அனுமதி கிடைக்காததால் தூர்வாரப்படாததுடன்,  தற்போது திட்ட மதிப்பீடும் அதிகரித்துவிட்டது. 
தூர்வாரும் பணிகள் நடைபெறாததால் குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. கால்நடைகள் மற்றும் பறவைகள் கூட தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை நீடித்து வருகிறது.
எனவே, தாமிரவருணி ஆற்றின் 53 பாசனக் குளங்களையும் வாய்க்கால்களையும் தூர்வாரி, அதன் முழு கொள்ளளவு நீரை சேமித்து வைக்கும் வகையில்,  சிறப்புத் திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடைகள் தவிப்பு...
குளங்களில் தண்ணீர் இல்லாததால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவசாயிகள் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக மழையின் அளவு குறைந்து வருவதால் பயிர் சாகுபடியும் குறைந்தது. இதனால் கால்நடைகளை தீவனத்திற்காக நீண்ட தூரம் அழைத்துச் சென்று வருகிறோம். 
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குளங்களை முறையாக தூர்வாரியிருந்தால் சிறிதேனும் தண்ணீர் தற்போது இருந்திருக்கும். ஆனால், குளங்களில் தண்ணீர் இல்லாததால் கால்நடைகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன என்றனர் அவர்கள். 
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் ரகுநாத் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி பாசனத்தின் கீழ் உள்ள அனைத்து குளங்களிலும் கடந்த 3ஆண்டுகளாக  வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்து குளம் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு தண்ணீர் அதிக அளவில் சேமிக்கப்பட்டது.  இந்த ஆண்டு தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் பாசனக் குளங்களில் தண்ணீர் இல்லை.  எனவே, குறிப்பிட்ட குளங்களில் மீண்டும் அவற்றை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது  என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com