மானூரில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முறையாக செயல்படுத்தக் கோரிக்கை

மானூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தனியாரிடம் விலை கொடுத்து

மானூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தனியாரிடம் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி மாணவர்-மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகிகள் விநியோகித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் மானூர் ஊராட்சி உள்ளது. இங்குள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனை, வணிக நிறுவனங்களை நம்பித்தான் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. மேலபிள்ளையார்குளம், தெற்குசெழியநல்லூர், கீழபிள்ளையார்குளம், ரஸ்தா, வெண்கலபொட்டல், நரியூத்து, பல்லிக்கோட்டை, அளவந்தான்குளம், கானார்பட்டி, குப்பனாபுரம், கட்டார்குழம், அழகியபாண்டியபுரம், சீதக்குறிச்சி, தெற்குப்பட்டி, எட்டான்குளம், மடத்துப்பட்டி, களக்குடி பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மானூருக்கு வந்து செல்கின்றனர். மானூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கோடை மழையும் பெய்யாததால், மானூர், பள்ளமடை குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது. மானூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தண்ணீர் வழங்க தனியார் டேங்கர் லாரிகள் மூலம் விலைக்கு வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மானூர் பகுதி மக்கள் கூறுகையில், 2005 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த திருநெல்வேலி-மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ், மானூர் ஊராட்சிக்கு முறையாக தண்ணீர் வழங்காமல், சங்கரன்கோவில் உள்ளிட்ட இதர பகுதிகளுக்கு இவ்வழியாக தாமிரவருணி குடிநீர் எடுத்துச்செல்லப்படுகிறது. குடிநீர்த் தட்டுப்பாட்டால் மானூர் மக்கள் தவித்துவருகின்றனர். மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தி, சுற்றுவட்டாரப் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com