குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த புளியங்குடி நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
By DIN | Published On : 23rd June 2019 12:56 AM | Last Updated : 23rd June 2019 12:56 AM | அ+அ அ- |

புளியங்குடி மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது கடும் வறட்சி காரணமாக தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. புளியங்குடியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புளியங்குடியில் உள்ள 33 வார்டு மக்களுக்கும் குடிநீரை சீராகப் பகிர்ந்தளிக்க நகராட்சி மூலம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடிநீர் விநியோகத்தின்போது, குடிநீர் குழாயில் நேரடியாக மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், குடிநீர் இணைப்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். மேலும், நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் உள்ள அலுவலர்கள் தங்கள் பகுதியில் ஆய்வு செய்ய வரும்போது முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, நகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, குப்பைகள் அகற்றுதல், வாருகால் சம்பந்தமான புகார்களை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவுசெய்தால் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.