தென்காசியில் 26இல் நலவாரிய உறுப்பினர் சேர்ப்பு
By DIN | Published On : 24th June 2019 10:17 AM | Last Updated : 24th June 2019 10:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: தொழிலாளர் நலவாரிய சேர்ப்பு முகாம் தென்காசியில் இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கான உறுப்பினர் சேர்ப்பு சிறப்பு பதிவு முகாம், தென்காசி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் இம் மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. விண்ணப்பத்துடன் 2 புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது தொடர்பாக பிறப்புச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிம நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகலுடன் நேரில் வந்து முகாமில் பங்கேற்று உறுப்பினராகப் பதிவு செய்யலாம். மனுதாரர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற இயலாது. மேலும், விவரங்களுக்கு பாளையங்கோட்டை திருமால்நகரில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துரை அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2555010 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.