பராமரிப்பின்றி பாழாகும் ஊருணி, மழை நீர் வடிகால்கள்!

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்த நிலையில் காணப்படும் மழைநீர்


களக்காடு:  திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்த நிலையில் காணப்படும் மழைநீர்  வடிகால்கள், கோயில் தெப்பக்குளங்களை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. 
களக்காடு நகரின் மையப் பகுதியில் நினைத்ததை முடித்த விநாயகர் கோயில் முன்புள்ள ஊருணி, கோயில்பத்து பள்ளி பின்புறமுள்ள ஊருணி, வள்ளியூர் சாலையில் தென்பகுதியில் அமைந்துள்ள புதர் மண்டிக் காணப்படும் ஊருணி ஆகியவை பராமரிப்பின்றி உள்ளன.
இதேபோல சத்தியவாகீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், திருக்கல்யாண வைபவம் நடைபெறும் திருக்கல்யாண வீதியில்  கௌதம ஆற்றின் கரையோரமுள்ள தெப்பக்குளம், கோயில்பத்து நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் தெப்பக்குளம்  ஆகியவை பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகின்றன. இவை  பல ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நிலத்தடி நீர் ஆதாரத்தை நிலை நிறுத்தும் காரணிகளாக இருந்தன. 
களக்காடு நகர்ப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புப் பகுதிகளையொட்டியவாறு மழைநீர் வடிகால்  அமைக்கப்பட்டு, அக்கால்வாயில் செல்லும் மழைநீர் வீணாகாமல் ஆறுகளில் கலந்து பாசனக் குளங்கள் எளிதில் நிரம்பும் வகையில் பயனுள்ளதாக இருந்தன.
களக்காடு ஐயப்பன் கோயில் அருகேயுள்ள சாலை வாய்க்கால் என குறிப்பிடப்படும் மழைநீர் வடிகால் அருகில் உள்ள  உப்பாற்றில் கலக்கிறது. இந்த மழைநீர் வடிகால் பல ஆண்டுகளுக்கு முன்பே கழிவுநீர் ஓடையாக மாறி தற்போது மழைநீரும், கழிவுநீரும் செல்லாத வகையில் தூர்ந்து காணப்படுவதுடன், குடியிருப்புப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கி வருகிறது.
புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உப்பாற்றில் இருந்து பழைய பேருந்து நிலையம் அருகே மாணிக்கன் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் கழிவுநீர் ஓடையாக மாறியதுடன் தற்போது புதர்மண்டி தூர்ந்து விட்டது.
உப்பாற்றில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாயில் முகப்புப் பகுதியிலேயே ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கால்வாயில் ஆங்காங்கே குடியிருப்புப் புகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி குப்பைகளால் கால்வாய் தூர்ந்து காணப்படுகிறது. 
பெரிய தெருவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளின் பின்புறம் அமைந்துள்ள மழைநீர் வடிகால் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இதிலிருந்து கழிவுநீர் வெளியேற முடியாத அளவுக்கு கால்வாயில் குப்பைகளும், மண் மேடுகளும், முள்புதர்களும் சூழ்ந்து சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகின்றன. 
பெரிய தெருவின் இரு புறங்களிலும் வீடுகளுக்கு முன்புறமுள்ள மழைநீர் வடிகால்கள் குடியிருப்பு வாசிகளால் தற்போது மூடப்பட்டு வடிகால் இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டன.  இதனால், மழைக் காலங்களில்  தெருவில் மழைநீர் தேங்கி ரதவீதி சாலைகள் சேதமடைந்து விடுகின்றன. 
களக்காடு நகரில் குடியிருப்புகளையொட்டி முன்னோர்கள் மழைநீர் வடிகால் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி வந்ததுடன், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணிக் காத்து வந்தனர். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக கண்காணிக்கப் படாததால் தெருக்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடுகளை உருவாக்கி வருகின்றன. 
ஆகவே, தூர்ந்து போன ஊருணிகளை தூர்வாருவதுடன் சுற்றுச்சுவர் எழுப்பி நீரைத் தேக்கி நிலத்தடி நீர் ஆதாரத்தை   நிலை நிறுத்தவும், மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் வாருகால்களை முறையாகத் தூர் வாரி சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணிக் காக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com