தென்காசியில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்: நகராட்சி ஆணையர்
By DIN | Published On : 25th June 2019 05:36 AM | Last Updated : 25th June 2019 05:36 AM | அ+அ அ- |

தென்காசி நகராட்சிப் பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் தென்காசி நகராட்சி ஆணையர்.
தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் அமைந்துள்ள தாமிரவருணி குடிநீர் நீருந்து நிலையப் பகுதியில் தென்காசி நகராட்சி ஆணையர் பிரேம்ஆனந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு, குளோரின் அளவு மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அலுவலர்களிடம் விவாதித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்காசி நகராட்சிக்குள்பட்ட 33 ஆவது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க நாள் ஒன்றுக்கு 67.5லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையாகும். இதில் தாமிரவருணி குடிநீர் திட்டத்தின் மூலம் 45 லட்சம் லிட்டரும், குற்றாலம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக 17லட்சம் லிட்டரும், சிறுமின்விசை பம்பு மற்றும் கை பம்பு ஆகியவற்றின் மூலம் 5.2லட்சம் லிட்டரும் வழங்கப்படுகிறது.
தற்போது குற்றாலத்தில் வறட்சிநிலை நிலவுவதால் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைந்து 8 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. குற்றாலம் குடிநீர் வரத்து குறைந்துள்ளதை ஈடுசெய்யும் பொருட்டு ஆயிரப்பேரி சாலையில் உள்ள நகராட்சி கிணறு சமீபத்தில் ஆழப்படுத்தப்பட்டு அதன்மூலம் 2 லட்சம் லிட்டர் அளவு தண்ணீர்பெறப்பட்டும், நகராட்சி குடிநீர் வாகனத்தின் மூலமாகவும் சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி நகராட்சிப் பகுதியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்நகராட்சியில் 6 நபர்களின் தலைமையில் குடிநீர் விநியோக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு நகராட்சிப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.